இலங்கையில் பணமோசடி (Money Laundering) தொடர்பான குற்றங்களின் வரம்பை கணிசமாக விரிவாக்கவும், புலனாய்வாளர்களின் அதிகாரங்களை வலுப்படுத்தவும், திட்டமிட்ட வரி ஏய்ப்பை ஒரு முதன்மைக் குற்றமாக (Predicate Offence) மாற்றுவதற்கும் ஏதுவாக, பணமோசடித் தடுப்புச் சட்டத்தில் பாரிய திருத்தங்களைக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதிசார் நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) சர்வதேச தரணிகளுக்கு அமைய, நாட்டின் சட்டக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும், கடந்த இரு தசாப்த கால விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட நடைமுறை குறைபாடுகளுக்குத் தீர்வுகாண்பதற்காகவும் இந்தத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) அதிகாரிகள், நாடாளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் (CoPF) தெரிவித்துள்ளனர்.
முன்மொழியப்பட்டுள்ள புதிய மாற்றங்களின் கீழ், குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட பணத்தை மறைப்பது அல்லது கைமாற்றுவது மட்டுமன்றி, அத்தகைய சொத்துக்களைப் பயன்படுத்துதல், கொள்வனவு செய்தல், மாற்றுதல் மற்றும் அதன் உண்மையான பயனாளி உரிமையாளராக (Beneficial Ownership) இருத்தல் ஆகிய அனைத்துமே பணமோசடிக் குற்றத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்படவுள்ளன. இதன் மூலம் குற்றப் பின்னணி கொண்ட சொத்துக்களைக் கையாளுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சட்டத்துறையினருக்குப் பரந்தளவில் கிடைக்கப் பெறும்.
சொத்து கொள்வனவு மற்றும் பொறுப்புக்கூறல்
குற்றச் செயல்களின் மூலம் ஈட்டப்பட்ட ஒரு சொத்தை, முதலீட்டாளர் ஒருவர் அறியாமல் கொள்வனவு செய்தால் என்ன நடக்கும் என அரசாங்க நிதி பற்றிய குழுவினர் (CoPF) இதன்போது கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அதிகாரிகள், அவ்வாறு கொள்வனவு செய்த நபர் அச்சொத்தின் குற்றப் பின்னணி குறித்து தனக்குத் தெரியாது என்பதையும், தான் அதனை நல்லெண்ணத்தின் (Good Faith) அடிப்படையிலேயே வாங்கினேன் என்பதையும் சட்ட ரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். மேலும், இதற்கான நிரூபிக்கும் பொறுப்பு (Burden of Proof) பிரதிவாதித் தரப்பையே சாரும் என்றும் அவர்கள் விளக்கமளித்தனர்.
முதன்மைக் குற்றமாக மாறும் வரி ஏய்ப்பு
இந்தச் சட்டத் திருத்தத்தின் மிக முக்கியமான மாற்றமாக, உள்நாட்டு வருமானவரிச் சட்டத்தின் 189 ஆம் பிரிவின் கீழ் வரும் ‘திட்டமிட்ட அல்லது வேண்டுமென்றே செய்யப்படும் வரி ஏய்ப்பு’ (Wilful Tax Evasion), இனி பணமோசடிக்கான ஒரு முதன்மைக் குற்றமாகக் கருதப்படும். எனினும், சாதாரண வரித் தகராறுகள் அல்லது வரி மதிப்பீட்டு முரண்பாடுகளுக்கு இது பொருந்தாது என்றும், வரிச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே குற்றவியல் குற்றமாகக் கருதப்படும் திட்டமிட்ட வரி ஏய்ப்புகளுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இத்தகைய விதிகள் மிகவும் கடுமையானவை என்றும், சாதாரண வரி செலுத்துவோரைக் கூட பணமோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கக் கூடும் என்றும் குழுவினர் இதன்போது சுட்டிக்காட்டினர். அதற்குப் பதிலளித்த மத்திய வங்கி அதிகாரிகள், தீவிரமான வரி ஏய்ப்புகளைப் பணமோசடிச் சட்டக் கட்டமைப்போடு இணைக்க வேண்டும் என்ற FATF அமைப்பின் பரிந்துரைக்கு இணங்கவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
சொத்துக்களை முடக்கும் காலம் நீடிப்பு
சந்தேகத்திற்குரிய குற்றவியல் சொத்துக்களைப் புலனாய்வாளர்கள் முடக்கி வைப்பதற்கான கால அவகாசம், தற்போதிருக்கும் 7 நாட்களில் இருந்து 14 வேலை நாட்களாக அதிகரிக்கப்படவுள்ளது. அதன் பின்னரே அவர்கள் மேல் நீதிமன்றக் கட்டளையைப் பெற வேண்டும். நீதிமன்ற விடுமுறைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களைக் கருத்திற்கொள்ளும் போது தற்போதிருக்கும் கால அவகாசம் நடைமுறைக்குச் சாத்தியமற்றதாக உள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய சொத்துக் மேலாண்மை அதிகார சபை
பணமோசடி வழக்குகளின் மூலம் பறிமுதல் செய்யப்படும் சொத்துக்கள், இனிமேல் தற்போதிருக்கும் நடைமுறைகளுக்குப் பதிலாக, புதிதாக நிறுவப்படவுள்ள ‘குற்றச் செயல்கள் மூலமான சொத்துக்கள் மேலாண்மை அதிகார சபையினால்’ (Proceeds of Crime Management Authority) நிர்வகிக்கப்படும்.
வழக்கு விசாரணைகளின் போது இந்த அதிகார சபை அச்சொத்துக்களைப் பராமரிக்கும் என்பதுடன், இறுதி நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் அவை விற்பனை செய்யப்பட்டு, அந்தப் பணம் அரசாங்கத்தின் திரட்டப்பட்ட நிதிக்கு (Consolidated Fund) மாற்றப்படும் என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச நிதிசார் நடவடிக்கை பணிக்குழுவின் (FATF) இலங்கைக்கு எதிரான அடுத்தடுத்த மதிப்பீடுகளுக்கு முன்னதாக, நாட்டின் பணமோசடி தடுப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய சட்டமூலங்களின் ஒரு பகுதியாக இந்தத் திருத்தச் சட்டம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
