அர்வின் ஜயசூரிய-https://srilankachronicle.com
உலக வங்கி இலங்கையை மீண்டும் ‘உயர் நடுத்தர வருமான நாடு’ (Upper Middle Income) என வகைப்படுத்தியிருப்பதை, தங்களது பொருளாதார சீர்திருத்தங்களுக்கு கிடைத்த சான்றாக அரசாங்கம் கொண்டாடி வருகிறது. கடந்த 2025 ஆம் ஆண்டில் பதிவான 5 சதவீத உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) வளர்ச்சி மற்றும் தனிநபர் மொத்த தேசிய வருமானத்தின் (GNI per capita) முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஆவண ரீதியாக இந்த தகைமை மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்தவரை இது கொண்டாடுவதற்குரிய ஒரு மைல்கல்லாகும்.
ஆனால், பெரும்பாலான இலங்கை மக்களுக்கு இந்த அறிவிப்பு தங்களின் அன்றாட எதார்த்த வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விடுபட்ட ஒன்றாகவே உணர்கிறார்கள்.
நவீன பொருளாதார அளவீடுகளின் முரண்பாடு இதுதான்: புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஒரு நாடு உயர்நிலைக்குச் செல்லக்கூடும், ஆனால் அதே நேரத்தில் அந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் மேலும் மேலும் மூழ்கிக்கொண்டிருக்கலாம்.
இன்று, இலங்கையின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் வறுமைக் கோட்டின் கீழ் அல்லது அதற்கு நெருக்கமான நிலையிலேயே வாழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டுமே தவிர, அதிகரித்திருக்கக் கூடாது. ஊட்டச்சத்து குறைபாடு இன்னும் ஒரு கடுமையான கவலையாகவே நீடிக்கிறது. அரச மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு தொடர்கிறது. உள்நாட்டு வேலைவாய்ப்பின் முதுகெலும்பாக விளங்கிய சிறு மற்றும் நடுத்தர தொழில்துறைகள் (SMEs), குறைந்த நுகர்வுத் தேவை, அதிக வரிகள் மற்றும் அதிகரித்த கடன் வட்டி விகிதங்கள் காரணமாக உயிர்வாழப் போராடி வருகின்றன. எண்ணற்ற குடும்பங்களுக்கு, வாழ்க்கைச் செலவுப் பிரச்சினை (Cost-of-living crisis) தணிவதாக இல்லை; மாறாக அது அவர்களின் வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டுவிட்டது.
இங்குதான் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கதையாடலானது (Official Narrative) மக்களின் வாழ்வியல் அனுபவங்களுடன் நேரடியாக முரண்படுகிறது.
‘உயர் நடுத்தர வருமானம்’ என்ற லேபல் சர்வதேச அளவுகோல்களை திருப்திப்படுத்தலாமே தவிர, அது மக்களின் தட்டில் உணவை இடப்போவதில்லை, மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கப் போவதில்லை அல்லது மருத்துவமனைகளில் மருந்துகளைக் கிடைக்கச் செய்யப் போவதில்லை. பாடசாலைச் செலவுகளைக் கூட ஈடுகட்ட முடியாத பெற்றோரின் கவலைகளையோ, அல்லது தங்களது வணிகங்களைத் தொடர முடியாத தொழில்முனைவோரின் ஏமாற்றங்களையோ இந்த புள்ளிவிவரங்கள் தீர்த்துவிடாது.
சமூகத்தில் வெளிப்படையாகத் தெரியும் அப்பட்டமான சமத்துவமின்மை
அதே நேரத்தில், மற்றொரு எதார்த்தமும் சமூகத்தில் உருவாகி வருகிறது — அது இன்னும் விபரீதமானது.
சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட தட்டினர் தங்களின் எல்லையற்ற ஆடம்பரத்தை வெளிப்படையாகக் காண்பித்து வருகின்றனர்: சொகுசு வாகன இறக்குமதிகள், உயர் அடுக்குமாடி சொகுசு வீடுகள், பிரத்தியேக சர்வதேசப் பயணங்கள் மற்றும் சிறிய நோய்களுக்காகக் கூட வெளிநாடுகளுக்குச் சென்று உயர்தர மருத்துவ சிகிச்சைகளைப் பெறுதல் என்பன இதில் அடங்கும். இலங்கையின் வீதிகளில் அண்மைக் காலமாக உலா வரும் அதிநவீன ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce), பென்ட்லி (Bentley), டெஸ்லா (Tesla) மற்றும் அதிஉயர் ரக BYD மின்சார வாகனங்கள், நாட்டின் பொருளாதார மீட்சியானது எவ்வளவு சமச்சீரற்றதாக (Uneven) உள்ளது என்பதற்கு அப்பட்டமான சான்றுகளாகும்.
புள்ளிவிவர ரீதியான செழுமைக்கும், சமூக ரீதியான வறுமைக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளியானது, சமூகத்தில் ஒரு ஆபத்தான பிளவை ஏற்படுத்தி வருகிறது.
பெரும்பான்மையான மக்களை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டு, சமூகத்தின் ஒரு சிறிய குழுவினருக்கு மாத்திரம் அனுகூலமாக அமையும் பொருளாதார வளர்ச்சியானது ஒருபோதும் ‘உள்ளடக்கிய வளர்ச்சி’ (Inclusive Growth) ஆகாது. இது மக்களிடையே பெரும் குரோதத்தையும், அநீதி இழைக்கப்படுவதான உணர்வையும் ஆழமாக விதைக்கும். அதுமட்டுமன்றி, அரசாங்கம் முன்னெடுக்கும் சீர்திருத்த செயல்முறைகளின் சமூகத் தன்மையையும் (Social Legitimacy) கேள்விக்குள்ளாக்கும்.
இங்கு ஆபத்து சமத்துவமின்மையில் மாத்திரம் இல்லை, அது சமூகத்தில் எவ்வளவு வெளிப்படையாகத் தெரிகிறது என்பதில் தான் உள்ளது.
நெருக்கடியும் ஆடம்பரமும் அருகருகே வாழும்போது — அதாவது ஒரு குடும்பம் ஒருவேளை சோற்றுக்கு அரிசி வாங்கப் போராடும் அதே வேளையில், மற்றொரு குடும்பம் சொகுசு காரை தரம் உயர்த்தும்போது — பொருளாதார விரக்தி என்பது தனிநபர் சார்ந்த கோபமாக மாறுகிறது. அது வெறும் கொள்கை சார்ந்த விவாதமாக இருக்காமல், நியாயம், நீதி மற்றும் சம வாய்ப்பு என்பனவற்றுக்கான போராட்டமாக உருவெடுக்கிறது.
உண்மையான முன்னேற்றத்தின் அளவுகோல்

இலங்கை இன்று எதிர்கொண்டுள்ள முக்கிய சவால் இதுதான்.
அதிகரித்து வரும் சமத்துவமின்மையின் மீது எந்தவொரு நாடும் நிலையான ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்ப முடியாது. நுண் பொருளாதார ரீதியிலான (Microeconomic) மக்களின் அவலங்களைப் புறந்தள்ளிவிட்டு, பருவகால பொருளாதார (Macroeconomic) தரமுயர்த்தல்களைக் கொண்டாட முடியாது. மீட்சியின் பலன்கள் ஒரு சிலரின் கைகளில் மாத்திரம் குவிந்திருக்கும் போது, சமூக ஒற்றுமை நீடிக்கும் என்று எதிர்பார்க்கவும் முடியாது.
முன்னேற்றத்தின் உண்மையான அளவுகோல் என்பது சர்வதேச நிறுவனங்கள் வழங்கும் தரவரிசை அல்ல; மாறாக நாட்டின் சாதாரண குடிமகன் அனுபவிக்கும் வாழ்க்கைத் தரமே ஆகும்.
இலங்கை இப்போது உத்தியோகபூர்வமாக ‘உயர் நடுத்தர வருமான நாடு’ என்றால், இங்கு மிக முக்கியமான கேள்வி இதுதான்: நாட்டின் சாதாரண மக்களில் எத்தனை பேர் அதனை உண்மையாக உணர்கிறார்கள்?
இந்தக் கேள்விக்கான பதில் மாறும் வரை, இப்போது ‘பொருளாதார மீட்சி’ என்று கொண்டாடப்படும் இந்தக் காலகட்டமானது, எதிர்காலத்தில் சமூகப் பிளவுகள் (Social Fracture) ஆழமடைந்த ஒரு இருண்ட காலமாகவே நினைவுகூரப்படும் அபாயம் உள்ளது.