ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) உள்ள ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை அமெரிக்கா “உடனடியாக” அமல்படுத்துகிறது என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த முக்கிய கடல்வழிப் பாதையின் “காவலனாக” அமெரிக்கா செயல்படும் என்றும், அங்கு “பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான” செலவினங்களை ஈடுசெய்யும் பொருட்டு, கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படும் அனைத்து சரக்குகளுக்கும் 20% கட்டணம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். எனினும், நடைமுறையில் இது எவ்வாறு சாத்தியமாகும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என எங்களது வெள்ளை மாளிகை செய்தியாளர் தெரிவிக்கிறார்.
முன்னதாக, இந்த முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையின் “நிர்வாகத்தில் அமெரிக்கா தலையிடுவதை” அனுமதிக்கப் போவதில்லை என்று ஈரானிய இராணுவம் எச்சரித்திருந்தது.

இதற்கிடையில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பரஸ்பரத் தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களை ஈரான் இலக்கு வைத்ததற்குப் பதிலடியாக, ஈரானில் தங்களது சமீபத்திய தாக்குதல் சுற்றுகளை “வெற்றிகரமாக முடித்துள்ளதாக” அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) நேற்றிரவு தெரிவித்துள்ளது.
‘மரைன் டிராஃபிக்’ (MarineTraffic) என்ற கப்பல் கண்காணிப்பு இணையதளத்தின்படி, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்களே இந்த முக்கிய நீரிணை வழியாக தற்போது பயணிப்பதாகவும், போக்குவரத்து இன்னும் மட்டுப்படுத்தப்பட்டே காணப்படுவதாகவும் தெரியவருகிறது.
அதேவேளை, ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களையும், ஓமானில் உள்ள ரேடார் அமைப்புகளையும் தாம் இலக்கு வைப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. அத்துடன், ஈரான் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக பஹ்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
