ஹெளத்தி (Houthi) கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள சனா சர்வதேச விமான நிலையத்தில் (Sanaa International Airport) ஈரானிய விமானம் தரையிறங்குவதைத் தடுக்கும் பொருட்டு, யேமனின் படையினர் அங்குள்ள ஓடுதளத்தின் (Runway) மீது குண்டுவீச்சு நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அந்த ஈரானிய விமானம் யேமனின் மேற்குப் பகுதியிலுள்ள அல் ஹுதைதா (Al Hudaydah) விமான நிலையத்தில் திங்கட்கிழமையன்று தரையிறங்கியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அன்று அதிகாலையில் சனா விமான நிலைய ஓடுதளம் இலக்கு வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, செங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள அல் ஹுதைதா நகரில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டதாக பிரெஸ் டிவி (Press TV) ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஹெளத்தி அமைப்பினர் ஏமன் நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்தைத் தரையிறங்க அனுமதிக்காமல் தடுத்துவிட்டு, “ஏமன் வான்பரப்பு எல்லையை மீறும் வகையில்” ஈரானிய விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்தே, சனா விமான நிலைய ஓடுதளத்தின் மீது தங்களது படைகள் தாக்குதல் நடத்தியதாக யேமனின் பாதுகாப்பு அமைச்சகம் திங்கட்கிழமை அதிகாலை தெரிவித்தது.
மறுபுறம், இந்தத் தாக்குதலானது “பதிலடி மற்றும் தண்டனை இல்லாமல் கடந்து போகப் போவதில்லை” என்று ஹெளத்தி அமைப்பின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சாரீ (Yahya Saree) எச்சரித்துள்ளார்.
