தமிழர் வாழ்வியலில் சிறப்பு மிக்க நாளாகக் கருதப்படும் ஆடிப்பிறப்பு விழா, கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சிறுவர் மகிழக வளாகத்தில் இன்று (17.07.2026) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பண்பாட்டு அலுவல்கள் திணைக்களமும் கிளிநொச்சி மாவட்ட செயலக நலன்புரிச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு விழா ஆரம்பிக்கப்பட்டது.



தொடர்ந்து, மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்கள் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கிளி/குமுளமுனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் ஆசிரியர் ரா. நிசாந்தன் அவர்கள் ஆடிப்பிறப்பின் வரலாறு, பண்பாட்டு மற்றும் கலாசார முக்கியத்துவம் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவினை நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் ஆடிப்பிறப்பு பாடல் மற்றும் கவிதை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாரம்பரிய உணவுகளான ஆடிக் கூழ் மற்றும் கொழுக்கட்டை என்பன பரிமாறப்பட்டன.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைத் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிப் பாதுகாக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் ஒன்றாக ஆடிப்பிறப்பு பண்டிகை விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.