சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் உள்ளிட்ட இலங்கையில் இடம்பெற்ற சகல ஊடகவியலாளர் மற்றும் ஊடக நிறுவன பணியாளர்களின் படுகொலைச் சம்பவங்கள், கடத்தல்கள், காணாமலாக்கப்பட்டமைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாது பாதுகாக்கப்பட்டு வருகின்றமை, இலங்கையின் உள்ளகப் பொறிமுறை மீதான நம்பிக்கையை அறவே இல்லாமல் செய்துள்ளது. எனவே இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படுவதன் மூலம் நீதியை நிலைநாட்ட ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அவர்கள் உடனடியாக முன்வர வேண்டும் என யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தியுள்ளது.
மயில்வாகனம் நிமலராஜனின் 26 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு யாழ் வடமராட்சி ஊடக இல்லம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு வலிறுயுத்தப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண நகரில் உயர்பாதுகாப்பு வளையத்திற்குள் அமைந்திருந்த வீட்டில் வைத்து ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் அவர்கள் 2000 ஆம் ஆண்டு இதே நாளில் ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். “எங்கள் வீடு உயர் பாதுப்பு வளையத்தில் இருந்தது. அப்போது ஊரடங்கு சட்டமும் அமலில் இருந்தது. அங்கு நிறைய இராணுவ முகாம்கள் இருந்தன. எனவே அரசாங்கத்தின் துணை இல்லாமல் யாராலும் அதை செய்திருக்க முடியாது.” என்ற நிமலராஜனின் சகோதரியின் திட்டவட்டமான கருத்திற்குள் படுகொலையின் பின்னணி துலாம்பரமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இப்படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் யார் என்பது சாதாரண தமிழ் மக்களினால் உணரப்படுமளவிற்கு இருந்தும் 26 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்று வரை உரிய விசாரணைகள் எவையும் இன்றி, குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல், சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படாமல் இயல்பாக நடமாடியும், முக்கிய பதவிகளிலும் இருந்து வருகின்றனர். ஆட்சிகள் மாறினாலும் அதற்கான நீதி பொறிமுறை உருவாக்கப்படாமல் திட்டமிட்டு தவிர்க்கப்பட்டு வருகின்றமை இலங்கையின் உள்ளக பொறிமுறைக் குட்பட்டதான பாதுகாப்பு மற்றும் நீதித்துறை மூலமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அறவே அற்றுப்போய்விட்டது.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் துப்பாக்கி முனையில் இடம்பெற்ற படுகொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், கைதுகள் உள்ளிட்ட செயற்பாடுகள் மூலம் தமிழ் ஊடகத்துறையை அச்சுறுத்தி அடக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டு வந்த முனைப்புகள் தற்போதும் புதிய புதிய வடிவங்களில் தொடர்ந்தே வருகின்றன. தமிழ் மக்களின் உரிமைக்குரலாக ஓங்கி ஒலித்து வரும் ஊடகத்துறையை நசுக்குவதன் ஊடாக தமிழர்களின் குரலை மௌனிக்கச் செய்யும் நோக்கிலேயே இவை தொடர்கின்றன.
இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் இலங்கை அரச படைகள் மற்றும் அவர்களோடு சேர்ந்து இயங்கிய துணை ஆயுதக்குழுவினருமே இருந்துள்ளனர் இருந்து வருகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அவ்வாறு இருந்தும் நிமலராஜன் முதல் சிவராம் உட்பட பல ஊடகவியலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு காணமல் ஆக்கப்பட்டமையுடன் தொடர்புடைய குற்றவாளிகளான மேற்குறித்த எவரொருவரும் நீதி பொறிமுறை ஊடாக கண்டுபிடிக்கப்படாத நிலையே தற்போதுவரை தொடர்கின்றது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை மீதான இவ்வாறான அச்சுறுத்தல் நிலையானது இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் என்பவற்றின் மீதான கொடூரமான அடக்குமுறையின் வெளிப்பாடாகும்.
கொலைக் கலாசாரத்தின் பின்னணியில் ஊடகத்துறை மீதான இவ்வாறான தலையீடுகள் தொடர்வதனை உடனடியாக தடுத்து நிறுத்துவதுடன் இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் இதுவரைகாலமும் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவன பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதியை நிலைநாட்ட ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அவர்கள் உடனடியாக முன்வர வேண்டும் என, படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஜனின் நினைவு நாளில் யாழ் வடமராட்சி ஊடக இல்லம் வலியுறுத்தி நிற்கின்றது.
