ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எம். ஜயதிலக்க, அவரது மகன் மற்றும் கிராமவாசிகள் அடங்கிய குழுவினர், பதுளை மாவட்டத்தின் பண்டாரவளையிலிருந்து பல லொறி கிறிஸ்துமஸ் மரங்களை தலைநகர் கொழும்புக்குக் கொண்டு வருவது வழக்கம்.
இருப்பினும், இந்த ஆண்டு ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இவர்களது மாவட்டமும் ஒன்றாகும்.
“பண்டாரவளையிலிருந்து கொழும்பு வருவதற்கு வீதிகள் சீர் செய்யப்பட்டிருந்தன, எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆனால் ஏனைய சில பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன,” என்று அவர் கூறினார்.
கிறிஸ்துமஸ் காலத்தில் கிறிஸ்தவ வீடுகளிலும் ஏனைய இடங்களிலும் அலங்கரித்து வைக்கப்படும் இந்த கிறிஸ்துமஸ் மரங்கள், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் வளரும் ‘சைப்ரஸ்’ (Cypress) வகை மரங்களாகும்.
கிறிஸ்துமஸ் காலத்தில் விற்பனை செய்வதற்காகவே இந்த மரங்களை வளர்க்கும் விவசாயிகளிடமிருந்து ஜயதிலக்க இவற்றை விலைக்கு வாங்குகிறார்.
“6 முதல் 7 அடி உயரமுள்ள ஒரு மரத்தை வளர்க்க அவர்கள் சுமார் இரண்டு வருடங்கள் எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் மரக்கறித் தோட்டங்களின் வேலிகளிலும் இவற்றை வளர்க்கிறார்கள்,” என்று அவர் கூறுகிறார்.
“இந்த மரங்களுக்கு இது ஒன்றுதான் பயன்பாடு. எனவே, விவசாயிகள் நாங்கள் வருவதற்காகக் காத்திருக்கிறார்கள். நாங்கள் இந்த மரங்களை வாங்காவிட்டால், அவர்களுக்கு அவற்றை விற்க வேறு வழியில்லை.”
விவசாயிகளுக்கு விற்பனை வாய்ப்பு அற்றுப்போகவிருந்த மற்றுமொரு ஆண்டையும் ஜயதிலக்க நினைவு கூர்ந்தார்.
“கொவிட் (Covid) நெருக்கடியின் போது நாங்கள் கொழும்புக்கு வருவதில்லை என முடிவு செய்தோம். கொழும்பிலுள்ள பல வாடிக்கையாளர்கள் எங்களை அழைத்தார்கள். ஆனால் நிலைமை ஆபத்தானது என்று நாங்கள் கூறினோம்.”
“அப்போது எமது நீண்டகால வாடிக்கையாளரான ஒரு பெண்மணி என்னிடம் சொன்னார், ‘அப்படியானால் இந்த வருடம் இதுவும் (கிறிஸ்துமஸ் மரம்) இருக்கப் போவதில்லையா?’. அப்போதுதான் அவர் மிகவும் மனச்சோர்வடைந்திருப்பதை நான் உணர்ந்தேன். அதன் பிறகு எனது லொறியில் மரங்களை ஏற்றிக்கொண்டு கொழும்பு வந்தோம்,” என்று அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.