பேரிடர் நிலைமையின் பின்னர் இலங்கையின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அமைச்சின் திட்டங்களுக்கு இணையாக, “சமத்துவம் மற்றும் தரம்” என்ற கருப்பொருளின் கீழ் யுனிசெவ் (UNICEF) அமைப்பினால் தயாரிக்கப்பட்ட விசேட திட்டம் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
‘டிட்வா’ (Ditwah) சூறாவளி நிலைமையினால் பாதிக்கப்பட்ட நாட்டின் கல்வி முறையை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான இந்த கலந்துரையாடல் கல்வி அமைச்சில் நடைபெற்றது. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய மற்றும்யுனிசெவ் அமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
கட்டமைப்பு மறுசீரமைப்பு: பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை வகைப்படுத்தி, அவற்றை விரைவாகப் புனரமைத்தல். முழுமையாகச் சேதமடைந்த பாடசாலைகளுக்குப் பதிலாக மாற்று கற்றல் மையங்களை உருவாக்குதல்.
ஆசிரியர் மற்றும் ஊழியர் நலன்: பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் தனிப்பட்ட இழப்புகள் குறித்துக் கண்டறிந்து, அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதற்குத் தேவையான போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட வலுவூட்டல் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.
மாணவர் பாதுகாப்பு மற்றும் கற்றல் தொடர்ச்சி: மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை மீண்டும் வழங்குதல். அவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, கற்றல் நடவடிக்கைகள் தடையின்றித் தொடர்வதை உறுதி செய்தல்.
உள்ளடக்கிய கல்வி (Inclusion): எந்தவொரு மாணவரும் கல்வியைக் கைவிடாத வகையில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் ஏற்கனவே பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வி கற்கும் மாணவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துதல்.
டிஜிட்டல் மற்றும் நெகிழ்வுத்தன்மை: தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு பாட அட்டவணைகளை நெகிழ்வுத்தன்மையுடன் மாற்றுதல் மற்றும் நேரடியாகப் பாடசாலைக்கு வர முடியாத மாணவர்களுக்காக டிஜிட்டல் கற்றல் முறைகளை உருவாக்குதல்
