(The Chartered Institute of Management Accountants – CIMA) கடந்த 2026 ஜூன் 24 அன்று நடத்திய அதன் வருடாந்த பொதுக்கூட்டத்தில், அல்ஃப்ரெட் ரமோசெடி (Alfred Ramosedi – FCMA, CGMA) என்பவரைத் தனது 93ஆவது தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
அத்துடன், ‘சீமா’ (CIMA) மற்றும் ‘அமெரிக்க பொது சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் நிறுவனம்’ (AICPA) ஆகியன இணைந்து உருவாக்கிய உலகளாவிய கூட்டணியான ‘சர்வதேச சான்றளிக்கப்பட்ட தொழில்முறை கணக்காளர்கள் சங்கத்தின்’ (The Association) 11ஆவது இணைத் தலைவராகவும் (Co-Chair) அவர் பொறுப்பேற்கவுள்ளார்.
தனது பதவிக்காலத்தில், அல்ஃப்ரெட் நிதி மற்றும் கணக்கியல் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பது, இத்தொழில்துறையின் மிக மதிப்புமிக்க நாணயமாக ‘நம்பிக்கையை’ உயர்த்துவது, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் திறன் கொண்ட தொழில்முறை வல்லுநர்களை உருவாக்குவது மற்றும் அடுத்த தலைமுறை திறமையாளர்களுக்கான நல்வாய்ப்புகளை மேம்படுத்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்துவார். அவர் இச்சங்கத்தின் தலைவர் ஜான் லூயிஸ் (Jan Lewis – CPA, CGMA) உடன் இணைந்து, உலகளாவிய ரீதியில் இத்தொழில்துறையை மிக விரைவான மாற்றங்கள் நிறைந்த காலகட்டத்தினூடாக வழிநடத்தவுள்ளார்.
இதே பொதுக்கூட்டத்தில், டாக்டர் மேத்யூ ஹன்சார்ட் (Dr Matthew Hansard – FCMA, CGMA) சீமா அமைப்பின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றிய அல்ஃப்ரெட் ரமோசெடி பின்வருமாறு குறிப்பிட்டார்:
“நாம் இன்று எடுக்கும் முடிவுகள்—அதாவது நாம் எவ்வாறு நம்பிக்கையைப் பெறுகிறோம், தொழில்நுட்பத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறோம், நிச்சயமற்ற மற்றும் சிக்கலான சூழ்நிலைகளை எவ்வாறு வழிநடத்துகிறோம் மற்றும் அடுத்த தலைமுறையினருக்கு எவ்வாறு முதலீடு செய்கிறோம் என்பதுதான்—நிதி மற்றும் கணக்கியல் துறையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். அந்த முடிவுகளை நாம் சரியாக எடுத்தால், நாம் மாற்றத்திற்கு ஏற்ப வெறும் வேகத்தை மட்டும் தக்கவைத்துக் கொள்ளப் போவதில்லை; நாமே அந்த மாற்றத்தை வரையறுப்போம்.”
“மிகுந்த பணிவுடனும் பொறுப்புணர்வுடனும் இந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்,” என்று தொடர்ந்த அவர், “எங்கள் உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பரந்த தொழில்முறை சமூகத்திற்குச் சேவை செய்வதற்கும், அவர்களுடன் இணைந்து நம்பிக்கை, புத்தாக்கம் மற்றும் நல்வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.
ஏசியா பசிபிக் (ஆசிய பசிபிக்) பிராந்தியத்திற்கான AICPA மற்றும் CIMA அமைப்பின் பிராந்திய துணைத் தலைவர் வெங்கட் ரமணன் (Venkkat Ramanan) கூறுகையில்:
“ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வணிகங்களும் நிதி வல்லுநர்களும் அதிவேகமான மாற்றங்களை எதிர்கொண்டு வரும் ஒரு முக்கிய காலகட்டத்தில் அல்ஃப்ரெட்டின் தலைமைத்துவம் கிடைத்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூருக்கு வருகை தரவுள்ள அவரை நாங்கள் ஆவலுடன் வரவேற்கிறோம். அங்கு அவர் எமது உறுப்பினர்கள், பிராந்திய ஈடுபாட்டுக் குழுக்கள் (REG) மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து நிதித்துறையின் எதிர்காலத்தை உருவாக்குவது குறித்துக் கலந்துரையாடுவார்.” என்றார்.
அல்ஃப்ரெட் ரமோசெடியின் பின்னணி:
அல்ஃப்ரெட், தென்னாப்பிரிக்காவின் நிதி மற்றும் தொழில்முறை சேவைத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் (30 ஆண்டுகள்) மேலான அனுபவம் கொண்ட ஒரு சிறந்த வணிகத் தலைவர் ஆவார். அவர் தனது தொழில் வாழ்க்கையை 1595 இல் ‘நெட்பேங்க் லிமிடெட்’ (Nedbank Limited) நிறுவனத்தில் தொடங்கினார், அங்கு அவர் 15 ஆண்டுகள் மூத்த மற்றும் நிர்வாகப் பொறுப்புகளை வகித்தார். 2008 இல், அவர் நெட்பேங்க் பிரைவேட் வங்கியின் மேலாண்மை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார், அதன் பிறகு 2010 இல் ABSA வங்கியிலும், 2012 இல் ஆப்பிரிக்க வங்கியிலும் பணியாற்றினார். 2017 ஆம் ஆண்டில், வளர்ந்து வரும் சந்தைகளில் பொறுப்பான நுகர்வோர் கடன் மற்றும் நிதி நல்வாழ்வு திட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி நிதி சேவை நிறுவனமான ‘பேபோர்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் – தென்னாப்பிரிக்கா’ (Bayport Financial Services) இன் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) பொறுப்பேற்றார்.
நீண்டகாலமாக ‘சீமா’ (CIMA) அமைப்பில் தன்னார்வலராகப் பணியாற்றி வரும் அல்ஃப்ரெட், 1998 இல் சீமா கௌடெங் (Gauteng) கிளையின் செயலாளராக இணைந்தார் மற்றும் 1999 இல் தென்னாப்பிரிக்க பிராந்தியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் தென்னப்பிரிக்க பிராந்திய வாரியத்தை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்த அவர், 2002 முதல் 2009 வரை அதன் தொடக்கத் தலைவராகப் பணியாற்றினார்.
2009 இல், அவர் சீமா உலகளாவிய கவுன்சிலுக்குள் (CIMA Council) உள்வாங்கப்பட்டு, 2011 இல் ஓய்வு பெறும் வரை உலகளாவிய சந்தைகள், சந்தைப்படுத்தல் மற்றும் தொழில்முறை தரநிலைக் குழுக்களில் பணியாற்றினார். நிறுவனத்திற்கு அவர் ஆற்றிய தலைமைத்துவம் மற்றும் பங்களிப்பைப் பாராட்டி, 2013 இல் அவருக்கு ‘சீமா வெள்ளிப் பதக்கம்’ (CIMA Silver Medal) வழங்கப்பட்டது.
அவர் 2023 இல் மீண்டும் சீமா கவுன்சிலில் இணைந்ததுடன், சர்வதேச சான்றளிக்கப்பட்ட தொழில்முறை கணக்காளர்கள் சங்கத்தின் இயக்குநர்கள் குழுவிலும் இணைந்தார். கடந்த ஒரு வருடமாக சீமாவின் துணைத் தலைவராகப் பணியாற்றிய அல்ஃப்ரெட், தற்போது சீமாவின் நியமனக் குழு மற்றும் CGMA தேர்வு வாரியத்தின் உறுப்பினராக உள்ளார்.
அல்ஃப்ரெட் தனது மனைவி மற்றும் மூன்று முதிர்ந்த பிள்ளைகளுடன் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரில் வசிக்கிறார். அவர் புத்தகம் வாசிப்பது, சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஓட்டப்பயிற்சி செய்வதை விரும்புகிறார்.