கொழும்பு காணிப் பதிவாளர் ஒருவர் காணிப் பதிவுத் திணைக்களத்தின் போலி ரப்பர் முத்திரைகளைப் பயன்படுத்தி, மோசடி குழுக்களுக்கு போலியான உறுதிப்பத்திரங்களை (deeds) வழங்கியதாகவும், பின்னர் அக்குழுக்கள் அக்காணிகளையும் சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமித்ததாகவும் கூறப்படும் மோசடி ஒன்றை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆள் நடமாட்டமில்லாத காணிகள் மற்றும் வீடுகளைக் கும்பல்கள் பலவந்தமாக ஆக்கிரமித்து, பின்னர் அந்தச் சொத்துக்களை விட்டு வெளியேறுவதற்காகப் பணம் கேட்டு மிரட்டிப் பணம் பறிக்கும் (extortion) சம்பவங்கள் குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (Financial and Commercial Crimes Investigation Division) வரவழைக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கொழும்பு காணிப் பதிவாளராகப் பணியாற்றிய காலத்தில், அந்த அலுவலகத்தின் ஆவணத் தொகுதிகளில் (volumes) பிணைக்கப்பட்டுள்ள உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களின் பிரதிக்களை (duplicate copies) வெளித் தரப்பினருக்கு வழங்கியுள்ளார் என்பதும், இதன் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு ஆதரவளிக்கவும், சட்டபூர்வமான உரிமையாளர்களின் ஆவணங்களைப் போலியாகத் தயாரிக்கவும் சதி செய்துள்ளார் என்பதும், சில சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட காணிகளை விற்பனை செய்துள்ளார் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்தக் கும்பல்கள் காணி அல்லது சொத்துக்களை ஆக்கிரமித்த பின்னர், அதன் உண்மையான உரிமையாளர்கள் அவர்களை எதிர்கொள்ளும் போது, அவர்கள் மிரட்டிப் பணம் பறிப்பதை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதுடன், பெருந்தொகை பணம் செலுத்தப்பட்ட பின்னரே அந்த வளாகத்தை விட்டு வெளியேறுவார்கள் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
“இது மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு குழுவாகும், மேலும் இந்த மோசடி செய்பவர்களில் சில சட்டத்தரணிகளும் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்” என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பன்னிபிட்டியவைச் சேர்ந்த கே.கே. ருவானி நலிகா என்ற சந்தேகநபர், கொழும்பு தலைமை நீதவான் அசாங்க போதரகம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார். அத்துடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட காணிப் பதிவுத் திணைக்கள ஊழியர் மீது, தண்டனைச் சட்டக் கோவையின் 109 மற்றும் 113 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 113 (பி) மற்றும் 158 ஆம் பிரிவுகளின் கீழும், பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்தமைக்காகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
