BBC

இந்த உலகக் கோப்பைத் தொடர், இதற்கு முன்பு நடந்த எந்தவொரு தொடரையும் விட மிகப் பெரியதாக அமைந்துள்ளது.
அதிகப்படியான நாடுகள் பங்கேற்பதும், கூடுதல் போட்டிகள் நடப்பதும், போட்டியைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது – அதோடு பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகப்படுத்தியுள்ளது. களத்தில் உலகளாவிய கால்பந்து நட்சத்திரங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் வேளையில், அதற்கு வெளியேயோ பில்லியன்டொலர்கணக்கான வருவாயாக ஈட்டப்பட்டு வருகின்றன. ஆனால், இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பெரிய அளவில் பணம் கிடைத்துவிடவில்லை. எனவே, சிலர் இதில் பெரிய அளவில் லாபம் அடைந்திருக்கும் அதே வேளையில், நிதி ரீதியாக நஷ்டத்தைச் சந்தித்தவர்களும் இருக்கிறார்கள்.
ஃபிஃபா (FIFA) – இலாபம் அடைந்தவர் (Winner)

உலகக் கோப்பை மூலம் உலக கால்பந்து நிர்வாக அமைப்பான ‘ஃபிஃபா’ ஈட்டும் பணத்தின் அளவு மிக பிரம்மாண்டமானது. 2022 கத்தார் உலகக் கோப்பையில் அது சாதனை அளவாக $7.6 பில்லியன் (£5.6 பில்லியன்) வருவாய் ஈட்டியது. தற்போது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ 2026 தொடரில், குறிப்பாக 48 அணிகளாக விரிவுபடுத்தப்பட்ட இந்தத் தொடரின் மூலம், அந்த சாதனையை அது முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாய்ச் பேங்க் ரிசர்ச் (Deutsche Bank Research) அமைப்பின் மூத்த உத்தி வகுப்பாளரான மரியன் லேபோர் (Marion Laboure) கூறும்போது, நான்கு ஆண்டுகால சுழற்சி காலத்தில் ஃபிஃபாவின் வருவாய் $13 பில்லியனை நெருங்குவதால், அவர்கள் “எந்தவொரு சந்தேகமும் இன்றி” முதன்மையான லாபம் அடைந்தவர்கள் என்று குறிப்பிடுகிறார்.
ஒளிபரப்புரிமை, உரிமம் (licensing) மற்றும் விருந்தோம்பல் உரிமைகள் (hospitality rights) விற்பனை, ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்கள் மற்றும் டிக்கெட் விற்பனை ஆகியவற்றின் மூலமே ஃபிஃபாவிற்கு இந்த வருமானம் கிடைக்கிறது.
“ஃபிஃபா தனது அதிகாரப்பூர்வ மறுவிற்பனை சந்தை (official resale marketplace) மூலம் செகண்டரி மார்க்கெட்டிலும் தடம் பதித்துள்ளது. இதன் மூலம் வாங்குபவர் மற்றும் விற்பவர் இருவரிடமிருந்தும் தலா 15% கட்டணத்தைப் பெறுகிறது,” என்று லேபோர் மேலும் கூறுகிறார்.
வரும் தொடர்களில் இதை நாம் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கலாம். ஏனெனில், ஃபிஃபா இந்தத் தொடரை 64 அணிகளாக மேலும் விரிவுபடுத்த ஆலோசித்து வருகிறது. இதில் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் சேர்க்கப்படலாம் – இதன் மூலம் மேலும் பில்லியன் கணக்கான பார்வையாளர்கள் கிடைப்பார்கள்.
ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவின் கீழ், இந்த ஆண்டின் தொடர் 32 அணிகளில் இருந்து 48 அணிகளாக விரிவுபடுத்தப்பட்டது.
ரசிகர்கள் – நஷ்டம் அடைந்தவர்கள் (Losers)
ரசிகர்கள் தங்களின் வாழ்நாள் கனவுகளை நிறைவேற்றியிருக்கலாம், ஆனால் நிதி ரீதியாகப் பார்த்தால், இந்தத் தொடர் அவர்களுக்கு மிகவும் கடினமானதாகவே இருந்துள்ளது.
டிக்கெட்டுகளுக்காக மட்டுமே அவர்கள் செலவழிக்க வேண்டியிருந்த பெரும் தொகையும், தேவை அதிகமாக இருக்கும்போது விலையை உயர்த்தும் ஃபிஃபாவின் ‘டைனமிக் ப்ரைசிங்’ (dynamic pricing) உத்தி மீதான விமர்சனங்களும் பரவலாகப் பேசப்பட்டன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட, பராகுவேக்கு எதிரான தனது நாட்டின் தொடக்க ஆட்டத்திற்கான $1,000 டிக்கெட் விலை குறித்துக் கேட்கப்பட்டபோது, தான் அவ்வளவு தொகையைக் “கொடுக்க மாட்டேன்” என்று ஒப்புக்கொண்டார்.
நியூ ஜெர்சியின் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வமாக $32,970 என நிர்ணயிக்கப்பட்டிருந்தன, அதே நேரத்தில் சில மறுவிற்பனை (resale) டிக்கெட்டுகள் $2 மில்லியனுக்கும் அதிகமான விலைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ டிக்கெட் விலைகளை நியாயப்படுத்திப் பேசுகையில், அவை மற்ற அமெரிக்க விளையாட்டு நிகழ்வுகளின் விலைகளுக்கு இணையானவைதான் என்று வாதிட்டார்.
டிக்கெட்டுகள் தவிர, விமானக் கட்டணங்கள், உணவு மற்றும் தங்குமிடம் மூலமாகவும் ரசிகர்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
இதற்கு ஒரு உதாரணமாக செய்திகளில் இடம்பிடித்தது நியூ ஜெர்சி டிரான்சிட் ரயில் கட்டண உயர்வு ஆகும். மெட்லைஃப் ஸ்டேடியத்திற்குச் செல்லும் 30 நிமிட ரயில் பயணத்திற்கான ரிட்டர்ன் டிக்கெட் கட்டணம், வழக்கமான $12.90 என்ற அளவில் இருந்து இந்தத் தொடருக்காக $150 ஆக உயர்ந்தது. இதற்கு எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விலைகள் குறைக்கப்பட்டன, இருப்பினும் அவை வழக்கமான விலையை விட அதிகமாகவே இருந்தன.
ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்கள் – இலாபம் அடைந்தவர்கள் (Winners)
இத்தொடரைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஒளிபரப்பாளர்கள் பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருந்தாலும், இதைப் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும், தங்கள் பிராண்டுகளைக் காட்ட விரும்பும் ஸ்பான்சர்களின் தேவையும், விளம்பர இடங்களை விற்பதன் மூலம் அவர்கள் பெரும் லாபம் ஈட்டுவதைக் காட்டுகிறது.
இந்த உலகக் கோப்பையில் ஃபிஃபா, அதிகம் பேசப்பட்ட ‘ஹைட்ரேஷன் பிரேக்ஸ்’ (hydration breaks – வீரர்கள் தண்ணீர் குடிப்பதற்கான இடைவேளை) முறையைக் கொண்டு வந்தது. இது “முற்றிலும் விளையாட்டு சார்ந்த விஷயம்” என்றும், நிர்வாக அமைப்பிற்கு இதனால் கூடுதல் வருமானம் எதுவும் இல்லை என்றும் இன்ஃபான்டினோ கூறினார்.
இருப்பினும், வீரர்கள் தண்ணீர் குடிக்க வழங்கப்படும் அந்த மூன்று நிமிட இடைவேளை, ஒளிபரப்பாளர்களுக்கும் ஸ்பான்சர்களுக்கும் ஒரு புதிய வணிக வாய்ப்பை வழங்கியுள்ளது.
அமெரிக்க ஒளிபரப்பு உரிமையைப் பெற $485 மில்லியன் கொடுத்ததாகக் கூறப்படும் ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் (Fox Sports), இந்த இடைவேளைகளை ஒரு குறிப்பிட்ட பிராண்டின் “நிதியுதவியுடன்” (sponsored by) அறிமுகப்படுத்தியது.
வல்லுநர்களின் கூற்றுப்படி, ஃபாக்ஸ் தொலைக்காட்சியில் சராசரியாக 30 வினாடி உலகக் கோப்பை விளம்பர இடத்தின் விலை $200,000 முதல் $300,000 வரை இருக்கும். அமெரிக்கா விளையாடிய இறுதி கட்டப் போட்டிகளின் போது இது $750,000 வரை உயர்ந்தது.
“இந்த ஹைட்ரேஷன் பிரேக்குகள் முற்றிலும் விளம்பரத்திற்கானவை. இவை நிறுத்தப்பட்டால் நான் மிகவும் ஆச்சரியப்படுவேன். இந்த விரிவுபடுத்தப்பட்ட வடிவமே தொடரும், ஏனென்றால் பெரிய அளவிலான வர்த்தகமே இப்போது ஃபிஃபாவின் வணிக மாதிரியாக உள்ளது,” என்கிறார் டாய்ச் பேங்க் ரிசர்ச்சின் லேபோர்.
இங்கிலாந்தில் பிபிசி (BBC) அல்லது ஐடிவி (ITV) தொலைக்காட்சிகளில் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்கள் இந்த விளம்பரங்களில் இருந்து தப்பினர். ஏனெனில் பிபிசி விளம்பரங்களைப் பயன்படுத்துவதில்லை, ஐடிவி 60 நிமிட காலத்தில் பயன்படுத்தக்கூடிய விளம்பரங்களின் அளவு குறித்து ஒழுங்குமுறை விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சர்கள் தங்கள் பிராண்டுகளை இப்போட்டியுடன் இணைக்க அசுரத்தனமான தொகையைச் செலுத்துகிறார்கள், ஆனால் அடிடாஸ் (Adidas) மற்றும் கோகோ கோலா (Coca-Cola) போன்ற பிராண்டுகள் எல்லா இடங்களிலும் விளம்பரப்படுத்தப்படுவதன் மூலம் அவர்கள் நிதி ரீதியாகப் பயனடைகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஜெர்மன் விளையாட்டு ஆடை பிராண்டான அடிடாஸ், தனது முதன்மைப் போட்டியாளரான நைக்கியுடன் (Nike) கடுமையான போட்டியில் ஈடுபட்டுள்ளது. லாமின் யமால், ஜூட் பெலிங்ஹாம் மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோர் நடித்த தங்களின் “பேக்யார்ட் லெஜண்ட்ஸ்” (backyard legends) விளம்பரத்திற்காக மட்டும் அது சுமார் £50 மில்லியனைச் செலவிட்டுள்ளது.
இருப்பினும், சில அதிகாரப்பூர்வமற்ற பிராண்டுகளும் பயனடைந்துள்ளன. உதாரணமாக, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள லெவிஸ் ஸ்டேடியத்திற்கு வெளியே உள்ள லெவிஸ் (Levi’s) லோகோவை ரசிகர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக ஃபிஃபா அதை மூடியிருந்தது, இதுவே அதற்கு விளம்பரமாக அமைந்தது.
டேவிட் பெக்காம் – லாபம் அடைந்தவர் (Winner)

அடிடாஸின் முக்கிய விளம்பரத்தில் சர் டேவிட் பெக்காமின் AI (செயற்கை நுண்ணறிவு) வடிவமும் இடம்பெற்றுள்ளது – உண்மையைச் சொல்வதானால், அவருக்கு நேரில் வந்து படப்பிடிப்பில் கலந்துகொள்ள நேரம் இருந்திருக்காது.
யுகே-வின் (UK) முதல் பில்லியனர் விளையாட்டு வீரரான இவர், ஹோம் டிப்போ முதல் பேங்க் ஆஃப் அமெரிக்கா வரை பல விளம்பரங்களில் நடித்துள்ளார், அவர் உண்மையில் எந்த பிராண்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை நீங்கள் மறந்தே போயிருக்கலாம்.
பத்தாண்டுகளுக்கு முன்பே கால்பந்து விளையாடுவதிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும், பெக்காம் தொடர்ந்து அமெரிக்க சாக்கர் (US soccer) விளையாட்டின் முகமாக விளங்குகிறார். அவர் இணை உரிமையாளராக இருக்கும் அமெரிக்க கிளப்பான ‘இண்டர் மியாமி’ (Inter Miami), மேஜர் லீக் சாக்கரின் மிகவும் மதிப்புமிக்க கிளப்பாக $1.45 பில்லியன் மதிப்பில் மதிப்பிடப்பட்டுள்ளது.
அவரால் களத்தில் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போயிருக்கலாம், ஆனால் களத்திற்கு வெளியேயான வணிக விளையாட்டில் அவர் வென்றுள்ளார் என்றுதான் கூற வேண்டும்.
போட்டியை நடத்தும் நகரங்கள் – நஷ்டம் அடைந்தவர்கள் (Losers)
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ முழுவதும் உள்ள 16 நடத்தும் நகரங்கள், ரசிகர்களின் வருகையை வரவேற்று வருகின்றன, இது உள்ளூர் உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிகங்களை ஊக்குவிக்கிறது.
போஸ்டன் நகரில் உள்ள மதுபானங்களை ஸ்காட்லாந்து ரசிகர்கள் குடித்துத் தீர்த்து, அந்த நகர மக்களின் மனங்களை வென்றிருந்தாலும், நீண்ட கால பொருளாதார நன்மைகள் மிகக் குறைவு என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.
உலகளாவிய பொருளாதாரத்தில் சுமார் $41 பில்லியன் சேரும் என்றும், அதில் $17 பில்லியன் அமெரிக்க பொருளாதாரத்தை மட்டும் உயர்த்தும் என்றும், பெரும்பாலும் விருந்தோம்பல் மற்றும் தங்குமிடத் துறைகளில் 185,000 வேலைகள் உருவாக்கப்படும் என்றும் ஃபிஃபா மதிப்பிட்டிருந்தது.
ஆனால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மேலாண்மை நடைமுறை ஆராய்ச்சியாளரும், ஆக்ஸ்போர்டு குளோபல் புராஜெக்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான அலெக்சாண்டர் பட்ஜியர் (Alexander Budzier) கூறும்போது, இத்தகைய பெரிய விளையாட்டு நிகழ்வை நடத்துவதால் கிடைக்கும் நீண்ட கால பொருளாதார நன்மைகள் நடைமுறையில் சாத்தியப்படுவதில்லை என்கிறார்.
போட்டியை நடத்தும் நகரங்கள் பொதுவாக பார்வையாளர்களின் எண்ணிக்கையில் பெரிய வீழ்ச்சியைக் காண்கின்றன, ஏனெனில் பலர் இந்தத் தொடரின் நெரிசலையும் குழப்பத்தையும் தவிர்க்க விரும்புகிறார்கள் என்று அவர் கூறுகிறார்.
மேலும், வேலைவாய்ப்பில் தற்காலிக உயர்வு இருந்தாலும், அது பொதுவாக விருந்தோம்பல் துறையில் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளுக்கு மட்டுமே என்று அவர் வாதிடுகிறார். “இது வேலைகளை உருவாக்குகிறது, ஆனால் செல்வத்தை உருவாக்காது,” என்று அவர் கூறுகிறார்.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு ஸ்ட்ராட்ஃபோர்டில் கட்டப்பட்ட வீடுகள் மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்களைப் போல, உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களைச் செய்ய முடிவது மட்டுமே ஓரளவுக்கு “பயனுள்ள” பொருளாதார நன்மை என்று பட்ஜியர் வாதிடுகிறார்.
ஆனால் இந்த உலகக் கோப்பையின் பெரும்பகுதி ஏற்கனவே உள்ள மைதானங்கள், ஹோட்டல்கள், பயிற்சி வளாகங்கள் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதால், “மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் எந்தப் பொருளாதார நன்மைகளும் இருக்காது”.
வணிகப் பொருட்கள் விற்பனையாளர்கள் -இலாபம் அடைந்தவர்கள் (Winners)


ரசிகர்களின் ஆர்வம் உலகெங்கிலும் உள்ள அணிகளின் ஜெர்சி (kit) விற்பனையை அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு தங்களின் தேசிய அணி ஜெர்சி விற்பனை 2022 உலகக் கோப்பையை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்ததாக நைக்கி (Nike) தெரிவித்துள்ளது. இங்கிலாந்து ஜெர்சி அவர்களின் அதிக விற்பனையான ஒன்றாக இருந்தது, அதைத் தொடர்ந்து பிரான்ஸ், பிரேசில், நெதர்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளன.
அடிடாஸைப் பொறுத்தவரை, மெக்சிகோ ஜெர்சிகள் முதலிடத்தைப் பிடித்தன.
ஜேடி ஸ்போர்ட்ஸ் (JD Sports) நிறுவனம், இங்கிலாந்து டி-சர்ட் விற்பனையில் இது ஒரு சாதனை ஆண்டு என்று கூறியுள்ளது. போட்டியின் தொடக்கத்தில் தேசிய ஜெர்சியின் விற்பனை மற்ற நாடுகளின் ஜெர்சி விற்பனையை விட அதிகமாக இருந்தபோதிலும், ஒட்டுமொத்தமாக ஸ்காட்லாந்து ஜெர்சியே அதிகம் விற்பனையான ஒன்றாகக் கூறலாம் என அது தெரிவித்தது.
ஜெர்மனி, பிரேசில், மெக்சிகோ மற்றும் அர்ஜென்டினா ஜெர்சிகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது என்று அது மேலும் கூறுகிறது.
டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் கால்பந்து ஃபேஷன் பற்றி பேசும் கலாச்சார பத்திரிகையாளர் சி வாலண்டினா (Cee Valentina), இந்த வணிகப் பொருட்களின் பிரபலம் தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று கூறுகிறார்.
கால்பந்து சட்டைகள் “தினசரி தெருவோர ஆடை பேஷனாக (streetwear staple) மாறிவிட்டன” என்றும், முந்தைய காலத்து ஆடைகள் மீதான ஜெனரேஷன் இசட் (Gen Z)-இன் ஆர்வம் ரெட்ரோ (retro) சட்டைகளுக்கான தேவையாக மாறியுள்ளது என்றும், பெண்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்யேக சட்டைகள் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளன என்றும் அவர் பிபிசி நியூஸ்பீட்டிடம் தெரிவித்தார்.
இதன் மறுபக்கம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான போலி (counterfeit) பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
கால்பந்து சட்டைகள் போன்ற பொருட்கள் ஒரு ஃபேஷன் ட்ரெண்டாக மாறும்போது அவற்றின் விலை அதிகமாகிறது என்று வாலண்டினா கூறுகிறார், “ஆனால் போலிப் பொருட்கள் எப்போதும் இருக்கத்தான் செய்யும், ஏனென்றால் எளிதில் கிடைப்பது என்பது ஒட்டுமொத்த கால்பந்து கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.”
ஹோட்டல்கள் – நஷ்டம் அடைந்தவர்கள் (Losers)
ஹோட்டல் அறைகளுக்கான தங்களின் எதிர்பார்ப்பு பலிக்கவில்லை என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஹோட்டல் முன்பதிவுகள் குறைவாகவே உள்ளதாகவும் தொழில்துறை அமைப்புகள் தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷ் கொலம்பியா ஹோட்டல் அசோசியேஷன் கூறுகையில், இறுதி முன்பதிவு புள்ளிவிவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், கனடாவில் ஏழு போட்டிகளை வான்கூவர் நடத்தினாலும், ஜூன் மற்றும் ஜூலை மாத முன்பதிவுகள் “முந்தைய ஆண்டுகளை விட மிகவும் பின்தங்கியே உள்ளன” என்று தெரிவித்துள்ளது.
இத்தகைய தொடர்கள் “தொடர்ந்து 40 நாட்களுக்கு ஹோட்டல்கள் முழுமையாக நிரம்புவதை உருவாக்குவதில்லை”, மாறாக குறிப்பிட்ட தேதிகளை ஒட்டி மட்டுமே அதிக தேவையை ஏற்படுத்துகின்றன என்று அது கூறுகிறது.
அமெரிக்க ஹோட்டல் அதிபர்களுக்கும், போட்டிக்கு முந்தைய எதிர்பார்ப்பு பெரிய பலனைத் தரவில்லை.
அமெரிக்கன் ஹோட்டல் அண்ட் லாட்ஜிங் அசோசியேஷன் (AHLA), ஃபிஃபா தனது சொந்த பயன்பாட்டிற்காக அதிகமான அறைகளை மொத்தமாக முன்பதிவு செய்து (block-booking), ஒரு போலித் தேவையை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டை தான் ஏற்கவில்லை என்று ஃபிஃபா கூறியுள்ளது.
டாய்ச் பேங்க் ரிசர்ச்சின் லேபோர் கூறுகையில், 1998 இல் பிரான்சிலும் இதே போன்ற நிகழ்வு நடந்தது, அப்போது தேவை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.
“ஏப்ரல் மாதத்திற்குள், 80% அமெரிக்க ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களின் ஆரம்ப கணிப்புகளை விட முன்பதிவுகள் குறைவாக இருப்பதாகக் கூறினர் – நியூயார்க் ஹோட்டல் உரிமையாளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினரும், சியாட்டிலில் கிட்டத்தட்ட 80% பேரும் எதிர்பார்ப்பை விடக் குறைவான முன்பதிவுகளைப் பதிவு செய்துள்ளனர், மேலும் பலர் இந்தத் தொடரை ஒரு பெரிய நிகழ்வாகவே கருதவில்லை,” என்று அவர் மேலும் கூறுகிறார்.
பந்தய நிறுவனங்கள் (Betting companies) – லாபம் அடைந்தவர்கள் (Winners)
2026 உலகக் கோப்பையானது வரலாற்றிலேயே மிகப்பெரிய சூதாட்ட நிகழ்வாக மாறும் பாதையில் உள்ளது. பந்தயத் துறையில் முதலீடுகளைக் கொண்டுள்ள நிதிச் சேவை நிறுவனமான மேக்குவாரி (Macquarie) கருத்துப்படி, தோராயமாக $50 பில்லியன் பந்தயமாகக் கட்டப்படும் – அதாவது ஒரு போட்டிக்கு சுமார் $500 மில்லியன் பந்தயம் கட்டப்படும்.
அணிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தியதே இதற்குக் முதன்மைக் காரணம் என்று அது கூறுகிறது, அதாவது 2022 இல் நடந்த 64 போட்டிகளில் இருந்து, இப்போது 100 க்கும் மேற்பட்ட போட்டிகள் விளையாடப்படும்.
பேடி பவர் (Paddy Power), பெட்ஃபேர் (Betfair) மற்றும் ஸ்கை பெட் (Sky Bet) ஆகியவற்றைக் கொண்டுள்ள ஃபிளட்டர் என்டர்டெயின்மென்ட் (Flutter Entertainment) நிறுவனம், அமெரிக்கா மற்றும் பிரேசிலின் வளர்ச்சி காரணமாக, பந்தயம் கட்டப்படும் தொகை முந்தைய தொடரை விட இருமடங்காக இருக்கும் என்று கணித்துள்ளது.
மேக்குவாரியின் ஆய்வாளர் சாட் பெய்னான் (Chad Beynon) கூறுகையில், பாரம்பரியமாக போட்டிக்கு முன் பந்தயம் கட்டுவதை விட, போட்டியின் போது பந்தயம் கட்டும் ‘இன்-ப்ளே பெட்டிங்’ (in-play betting) முறை இப்போது ஆதிக்கம் செலுத்துகிறது என்கிறார்.
“இப்போது நீங்கள் களத்தில் பார்ப்பதற்கு ஏற்ப எதிர்வினையாற்றுவது மற்றும் உங்கள் கருத்துக்களை மாற்றுவது பற்றியதாக இது உள்ளது. இதற்கு முன்பு நீங்கள் அமர்ந்து, பார்த்து, காத்திருக்க வேண்டியிருந்தது – போட்டி தொடங்குவதற்கு முன்பே உங்கள் பந்தயத்தை நீங்கள் கட்டியிருக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்காவில் விளையாட்டு பந்தயம் (sports betting) என்பது இன்னும் ஒப்பீட்டளவில் ஒரு புதிய துறையாகவே உள்ளது. 2018 ஆம் ஆண்டு வரை, லாஸ் வேகாஸ் அமைந்துள்ள நெவாடாவில் மட்டுமே விளையாட்டு பந்தயம் சட்டப்பூர்வமாக இருந்தது, ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பல மாநிலங்கள் அதைச் சட்டப்பூர்வமாக்க வழிவகுத்தது.
இருப்பினும், கலிபோர்னியா மற்றும் டெக்சாஸ் உட்பட சில மாநிலங்களில் இது இன்னும் சட்டவிரோதமாகவே உள்ளது. அந்தப் பகுதிகளில் ‘பிரெடிக்ஷன் மார்க்கெட்ஸ்’ (prediction markets – கணிப்புச் சந்தைகள்) எனப்படும் முறையில் பெரிய அளவிலான ஈடுபாடு காணப்படுகிறது – இது இளைஞர்களிடையே பிரபலமாக உள்ள பில்லியன் டாலர் தொழில்துறையாகும் – இது சூதாட்டமாக வகைப்படுத்தப்படவில்லை என்பதால், ஒருவர் எந்த மாநிலத்தில் இருந்தாலும் விளையாட்டின் மீது பந்தயம் கட்ட இதைப் பயன்படுத்தலாம்