வெனிசுலா அருகே சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடலோர காவல்படையினரால் பின்தொடரப்பட்ட ‘பெல்லா-1’ (Bella 1) என்ற எண்ணெய் கப்பலை அமெரிக்கா அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது.
அட்லாண்டிக் பெருங்கடல் முழுவதும் பின்தொடர்ந்த பிறகு, வெனிசுலாவுடன் தொடர்புடைய இந்த எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் கைப்பற்றியுள்ளதாக அமெரிக்க ஐரோப்பிய கட்டளை அலுவலகம் (US European Command) சமூக ஊடகத்தில் உறுதிப்படுத்தியுள்ளது.
முக்கியப் பின்னணித் தகவல்கள்:
-
நிழல் கப்பற்படை (Shadow Fleet): ‘பெல்லா-1’ என்று முதலில் அழைக்கப்பட்ட இந்தக் கப்பல், சட்டவிரோத எண்ணெய் கடத்தலில் ஈடுபட்டதற்காக 2024-இல் அமெரிக்காவினால் தடை செய்யப்பட்டிருந்தது.
-
பெயர் மாற்றம்: அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக, இக்கப்பலின் மாலுமிகள் அதன் மேல்பகுதியில் ரஷ்யக் கொடியை வரைந்து, அதற்கு ‘மெரினேரா’ (Marinera) எனப் புதிய பெயரிட்டனர். மேலும், ரஷ்யாவின் பாதுகாப்பில் தாங்கள் இருப்பதாகக் கூறிக்கொண்டனர்.
-
ரஷ்யாவின் தலையீடு: இந்தக் கப்பலைப் பின்தொடர்வதை நிறுத்துமாறு கடந்த மாதம் ரஷ்யா அதிகாரபூர்வமாக தூதரக ரீதியான கோரிக்கையை முன்வைத்தது. இருப்பினும், ட்ரம்ப் நிர்வாகம் அந்த கோரிக்கையை ஏற்க மறுத்து, இக்கப்பலை எந்த நாட்டிற்கும் சொந்தமில்லாத (Stateless) கப்பலாகக் கருதி நடவடிக்கையைத் தொடர்ந்தது.
இராணுவ நடவடிக்கை:
இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடிக்க அமெரிக்கா தனது இராணுவ பலத்தைப் பயன்படுத்தியது:
-
இங்கிலாந்தில் உள்ள விமான தளங்களுக்கு அமெரிக்காவிலிருந்து 12க்கும் மேற்பட்ட C-17 போர் விமானங்களை அனுப்பியது.
-
P-8 கண்காணிப்பு விமானங்கள் மூலம் பல நாட்களாக கப்பலைக் கண்காணித்தது.
-
கப்பலைக் கைப்பற்ற AC-130 ரகத் துப்பாக்கி ஏந்திய விமானங்கள் மற்றும் சிறப்புப் படைகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
அரசியல் பின்னணி:
நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், வெனிசுலா மீது முழுமையான கடல்சார் முற்றுகையை (Complete Blockade) டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் அறிவித்திருந்தார். கடந்த சனிக்கிழமை அதிகாலை காரகாஸில் வைத்து மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட நிலையில், இடைக்கால அரசாங்கத்தின் மீதான பிடியை வலுப்படுத்த இந்த முற்றுகை தொடரும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
