அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்டுள்ள ஒப்பந்தமானது, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போரை நிறுத்தக் கோரவில்லை என்று இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் (Itamar Ben-Gvir) திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
தனது டெலிகிராம் (Telegram) சமூக ஊடகப் பக்கத்தில் இடாமர் பென்-க்விர் வெளியிட்டுள்ள பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
“டிரம்ப்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது… இந்த ஒப்பந்தத்தில் நாங்கள் ஒரு தரப்பு அல்ல. இது எங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை.”
“ஹிஸ்புல்லா அமைப்பை முழுமையாக முடக்குவதை விடக் குறைவான எதற்கும் நாம் உடன்படக் கூடாது. நமது வீரர்கள் கைப்பற்றி, பயங்கரவாதக் உள்கட்டமைப்புகளில் இருந்து விடுவித்த ஒரு அங்குல நிலப்பரப்பில் இருந்து கூட நாம் பின்வாங்கக் கூடாது,” என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையிலும் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போரைத் தொடரப் போவதாக இஸ்ரேல் சமிக்ஞை
இஸ்ரேலியப் படைகள் லெபனானில் “காலவரையறையின்றி” தங்கியிருக்கும் என்றும், அந்நாட்டின் தெற்குப் பகுதிகளில் இருந்து படைகளைத் திரும்பப் பெறுவதை தான் எதிர்ப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் போரைத் தொடங்கிய உடனே, இப்பகுதியில் இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே தொடர் மோதல்கள் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லைகளையும் அங்குள்ள இஸ்ரேலியக் குடியிருப்புகளையும் ஜிஹாதி அமைப்புகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக, லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் உள்ள பாதுகாப்பு மண்டலங்களில் ஐடிஎஃப் (IDF – Israel Defense Forces) காலவரையறையின்றி தங்கியிருக்கும் என்ற தெளிவான கொள்கையை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு லெபனானில் தனது இராணுவப் பிரசன்னத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் இந்த எண்ணம் குறித்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு டிரம்பிற்குத் தெரிவித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
“லெபனான் விவகாரங்கள் காரணமாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், நாம் நமது முழு பலத்துடன் அதன் மீது தாக்குதல் நடத்துவோம். அத்துடன் நமக்கும் அவர்களுக்குமான இராணுவ பலத்தின் இடைவெளியை (Power gaps) அவர்களுக்குத் தெளிவாகப் புரிய வைப்போம்,” என்று காட்ஸ் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகளில் முக்கிய மத்தியஸ்தராகச் செயற்பட்ட பாகிஸ்தான் தெரிவிக்கையில், அமெரிக்காவும் ஈரானும் எட்டியுள்ள ஒப்பந்தத்தில் லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது உள்ளடக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெறாது: டிரம்பிடம் நெதன்யாகு திட்டவட்டம் என இஸ்ரேலிய செய்திச் சேவை தகவல்
லெபனானில் இருந்து இஸ்ரேல் தனது படைகளைத் திரும்பப் பெறாது என்றும், அமெரிக்கா – ஈரான் இடையிலான ஒப்பந்தத்தில் லெபனான் தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களுக்குக் கட்டுப்பட வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்றும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, டிரம்பிடம் தெரிவித்துள்ளதாக இஸ்ரேலிய செய்திச் சேவையான ஒய்நெட் (Ynet) செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரப்பூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஒய்நெட் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்களுக்கு இஸ்ரேல் தொடர்ந்து பதிலடி கொடுக்கும் என்றும், ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தும் என்றும் நெதன்யாகு அதிபர் டிரம்பிடம் தெரிவித்துள்ளார்.
நெதன்யாகுவின் இந்த நிலைப்பாட்டிற்கு இஸ்ரேலிய அமைச்சரவை (Cabinet) தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாகவும் ஒய்நெட் செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.