அமெரிக்காவுடன் எட்டப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MoU) சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் 14 முக்கிய அம்சங்கள் அடங்கிய பட்டியலை ஈரானின் சக்திவாய்ந்த ‘இஸ்லாமிய புரட்சிகர இராணுவக் காவல்படை’ (IRGC) திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தான பின்னர் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் புரட்சிகர இராணுவக் காவல்படையின் (IRGC) கூற்றுப்படி, அந்த ஒப்பந்தத்தில் பின்வரும் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன:
-
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் போர் உட்பட, அனைத்து முனைகளிலும் உடனடியாகவும் நிரந்தரமாகவும் போரை நிறுத்துதல்.
-
ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்ற உறுதிமொழி மற்றும் இஸ்லாமிய குடியரசான ஈரானின் இறையாண்மையை மதிப்பல்.
-
ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கப்பல்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையை (Naval blockade) 30 நாட்களுக்குள் முழுமையாக நீக்குதல்.
-
ஈரானைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கான அமெரிக்காவின் உறுதிமொழி.
-
ஈரானின் ஒழுங்கமைப்புகளின் கீழ் 30 நாட்களுக்குள் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறத்தல்.
-
ஈரானிய கச்சா எண்ணெய், பெட்ரோகெமிக்கல் பொருட்கள் மற்றும் அவற்றின் வழித்தோன்றல்களின் விற்பனை மீதான தடைகளை நிறுத்தி வைத்தல் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை ஈரான் முழுமையாகப் பயன்படுத்துவதற்கான அனுமதி.
-
ஈரானின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களை முன்வைக்க வேண்டும் என்ற நிபந்தனை.
-
அணுசக்தி விவகாரங்கள் மற்றும் அமெரிக்காவின் முதன்மை, இரண்டாம் நிலைத் தடைகளை முழுமையாக நீக்குவது குறித்தும், ஐநா பாதுகாப்புச் சபை மற்றும் சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆளுநர்கள் குழுவின் தீர்மானங்களை நீக்குவது குறித்தும் இறுதி உடன்பாட்டை எட்ட 60 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்துதல்.
-
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) கீழ், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய மாட்டோம் என்ற தனது உறுதிப்பாட்டை ஈரான் மீண்டும் உறுதிப்படுத்துதல்.
-
இந்த 60 நாள் பேச்சுவார்த்தைக் காலத்தில், பிராந்தியத்தில் தனது படைகளை அதிகரிக்க மாட்டோம் என்றும், புதிய தடைகளை விதிக்க மாட்டோம் என்றும் அமெரிக்கா உறுதியளித்தல்.

-
60 நாட்கள் கொண்ட இறுதி பேச்சுவார்த்தைக் காலத்தில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 24 பில்லியன் டாலர் நிதியை விடுவித்தல்; இதில் பாதித் தொகை (12 பில்லியன் டாலர்) இறுதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே ஈரானுக்குக் கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.
-
இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிப்பதற்கான ஒரு கண்காணிப்பு பொறிமுறையை (Monitoring mechanism) நிறுவுதல்.
-
இறுதி ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் (UNSC) தீர்மானம் மூலம் அங்கீகாரம் பெறுதல்.
-
ஈரானின் வழக்கமான ஏவுகணைத் திட்டம் (Conventional missile program) மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய ஆயுதக் குழுக்களுக்கான (Resistance groups) ஆதரவு குறித்த விவாதங்கள் இந்த நிகழ்ச்சி நிரலில் இருந்து திட்டவட்டமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தரப்பின் மறுப்புக்கள்
அமெரிக்கா – ஈரான் இடையிலான இந்த ஒப்பந்தத்தின் கீழ், லெபனானில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறவோ அல்லது ஹிஸ்புல்லாவுக்கு எதிரான போரை நிறுத்தவோ தங்களுக்கு எந்தக் கடப்பாடும் இல்லை என்று இஸ்ரேல் நாட்டு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், டிரம்ப் நிர்வாகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை CBS நியூஸ் ஊடகத்திற்குத் தெரிவிக்கையில், ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்பட்ட கடமைகளை ஈரான் முறையாகப் பூர்த்தி செய்யும் வரை, முடக்கப்பட்டுள்ள நிதிச் சொத்துக்களின் எந்தவொரு பகுதியும் அந்த நாட்டுக்கு வழங்கப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இறுதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பே முடக்கப்பட்டுள்ள நிதியின் பாதித் தொகை கைமாற வேண்டும் என்ற ஈரானிய இராணுவத்தின் (IRGC) கூற்றுக்கும், அமெரிக்க அதிகாரியின் இந்த விளக்கத்திற்கும் இடையில் கால நேர முரண்பாடுகள் எழுந்துள்ளன.
“அவர்கள் வாக்குறுதி அளித்தபடி அணுசக்திப் பொருட்களை ஒப்படைத்தால், அவர்களுக்கு ஏதேனும் கிடைக்கும். அவர்கள் தங்கள் அணுசக்தி திட்டங்களையோ அல்லது அணுசக்தி வசதிகளையோ முடக்கினால், அவர்களுக்கு வேறு ஏதேனும் சலுகை கிடைக்கும். அவர்கள் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உண்மையாக உறுதியளித்தால், அவற்றுடன் கூடுதலாக இன்னும் பல விஷயங்கள் வழங்கப்படும்,” என்று அந்த அமெரிக்க அதிகாரி விளக்கியுள்ளார்.
மேலும், ஈரானிய அரசாங்கத்தினதும் அந்நாட்டு ஊடகங்களினதும் அறிக்கைகளை அப்படியே உண்மை என நம்ப வேண்டாம் என எச்சரித்த அவர், அவை வெறும் “உள்நாட்டுப் பிரசாரம்” (Domestic propaganda) என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
