-
நடைமுறைக் கணக்கு பற்றாக்குறையாக மாறுவதால் மத்திய வங்கி சவால்களை எதிர்கொள்கிறது
-
இராணுவ மோதல்கள் மற்றும் சூறாவளி ‘டிட்வா’ (Ditwah) ஆகியவற்றின் தாக்கங்கள் கையிருப்பில் எதிரொலிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ மொத்தக் வெளிநாட்டுக் கையிருப்பு, 2026ஆம் ஆண்டின் இறுதிக்காக சர்வதேச நாணய நிதியம் (IMF) நிர்ணயித்துள்ள 8.8 பில்லியன் டொலர் இலக்கை விட சுமார் 19% வரை குறைவடைவதற்கே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ‘பர்ஸ்ட் கெப்பிட்டல் ரிஸேர்ச்’ (First Capital Research – FCR) நிறுவனம் கணித்துள்ளது. நாட்டின் நடைமுறைக் கணக்கு (Current Account) பற்றாக்குறையாக மாறுவதும், மத்திய வங்கி தனது தற்போதைய வேகத்தில் கையிருப்பைத் தொடர்ந்து சேகரிப்பதில் எதிர்கொள்ளும் சவால்களுமே இதற்கு முதன்மைக் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளன.
இறுதியாகப் பகிரங்கப்படுத்தப்பட்ட மே மாத இறுதி வரையிலான தரவுகளை சுட்டிக்காட்டியுள்ள FCR நிறுவனம்: “விரிவடைந்து வரும் வர்த்தகப் பற்றாக்குறை, வெளிநாட்டுக் கடன் மறுசெலுத்தல்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) மேற்கொண்ட நிகர வெளிநாட்டு நாணய விற்பனை ஆகியவற்றின் காரணமாக, 2026 மே மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொத்தக் கையிருப்பு 6.9 பில்லியன் டொலராகப் பதிவாகியிருந்தது” எனத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், பன்முகக் கூட்டு நிறுவனங்களின் நிதியுதவிகள் நாட்டிற்குக் கிடைத்துள்ளதாக அந்த ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சுமார் 695 மில்லியன் டொலர் நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதி இலங்கைக்குக் கிடைத்துள்ளது. அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் இலங்கைக்கு “வரவு-செலவுத் திட்ட ஆதரவாக” (Budget Support) 480 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
இவ்வாறான நிதி ஆதரவுகள் கிடைத்த போதிலும், இந்த ஆண்டின் எஞ்சிய காலப்பகுதியில் மத்திய வங்கி தனது தற்போதைய வேகத்தில் வெளிநாட்டுக் கையிருப்பைத் தக்கவைப்பதில் பல முட்டுக்கட்டைகளை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“எவ்வாறாயினும், நாட்டின் நடைமுறைக் கணக்கு பற்றாக்குறையை நோக்கி நகர்வதால், மத்திய வங்கி தனது தற்போதைய வேகத்தில் கையிருப்பைச் சேகரிப்பதில் கணிசமான சவால்களை எதிர்கொள்ள நேரிடலாம். இதற்கமைய, 2026 இறுதிக்குள் இலங்கையின் கையிருப்பு 7.25 பில்லியன் டொலராக மட்டுமே இருக்கும் என FCR மதிப்பிடுகிறது. இது சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பான 8.8 பில்லியன் டொலரை விடக் குறிப்பிடத்தக்களவு குறைவாகும்.”
இந்த ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இலங்கையின் நடைமுறைக் கணக்கின் நிலை குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள FCR நிறுவனம்: “2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில், நடைமுறைக் கணக்கு ஓரளவு ஸ்திரத்தன்மைக்கான அறிகுறிகளைக் காட்டியது. ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட தங்களது குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் அதிகளவில் பணத்தை அனுப்பியதால், வெளிநாட்டுப் பணப்பாய்வு (Remittances) வலுவடைந்தது. இது ஒட்டுமொத்தக் கணக்கின் சமநிலையில் ஏற்பட்ட ஆரம்பக்கட்ட சரிவை ஓரளவுக்கு ஈடுசெய்தது” எனக் கூறியுள்ளது.
“இருப்பினும், எதிர்காலத்தை நோக்குகையில் பொருளாதார அபாயங்கள் கீழ்நோக்கியே காணப்படுகின்றன. மத்திய கிழக்கில் தொடரும் பதற்ற நிலைமைகள் மற்றும் பிராந்திய ஸ்திரமின்மை காரணமாக, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்து, இலங்கையின் இறக்குமதிச் செலவினங்களை மேலும் அதிகரிக்கச் செய்யலாம்,” என்றும் அகம் எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் புவிசார் அரசியல் சூழல் இலங்கையின் ஏற்றுமதி வருவாயில் ஏற்படுத்தக்கூடிய பரந்த தாக்கங்கள் குறித்து விளக்கியுள்ள FCR ஆய்வுப் பிரிவு: “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து இலங்கைத் தேயிலைக்கான தேவை குறைவடைவதால் நாட்டின் ஏற்றுமதி வருவாய் பலவீனமடையக்கூடும். அதேவேளை, மத்திய கிழக்குடன் நெருங்கிய தொடர்புடைய சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டுப் பணப்பாய்வு ஆகியவற்றில் ஏற்படக்கூடிய மந்தநிலை, நாட்டின் நடைமுறைக் கணக்கையும் செலுத்துமதி நிலுவையையும் (Balance of Payments – BoP) மேலும் நெருக்கடிக்குள்ளாக்கலாம்” எனத் தெரிவித்துள்ளது.
2026ஆம் ஆண்டின் இறுதிப் பகுதிக்கான இலங்கையின் நடைமுறைக் கணக்கு மீதி 19.5 மில்லியன் டொலராக மட்டுமே இருக்கும் என FCR நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.