நாட்டின் வரி வருவாயில் கணிசமானமொரு பகுதி விவசாய சமூகத்திற்காகவே செலவிடப்படுவதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லல்காந்த தெரிவித்துள்ளார்.
“வாரி மஹிம அபே உறுமய” (நீர்ப்பாசனத்தின் பெருமை எமது பாரம்பரியம்) தேசிய திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும், மகா மங்கடவல குளக்கட்டு புனரமைப்பு மற்றும் மதகுடன் கூடிய அணைக்கட்டு கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
விவசாயிகளின் நலனுக்காக பில்லியன் கணக்கான ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், நாட்டிற்கு கிடைக்கும் வெளிநாட்டுப் பணப்பாய்வுகளும் (Foreign Remittances) விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்காகவே பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
நெல் விவசாய மக்கள் மட்டுமன்றி, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களும் மிளகு ஏற்றுமதியாளர்களும் கூட தேசிய பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுவதாக அமைச்சர் லல்காந்த மேலும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரிசிக்கு வெளிநாட்டு சந்தைகளில் ஏற்றுமதித் தேவைப்பாடு எதுவும் இல்லாததால், விலைகள் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் நெல்லைச் சேமித்து வைக்காமல், நெல் சந்தைப்படுத்தல் சபையின் (Paddy Marketing Board) களஞ்சியசாலைகள் திறக்கப்படும் போது விவசாயிகள் தங்களது முழு நெல் அறுவடையையும் அதனிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
நெல் துறையில் விலை ஏற்ற இறக்கங்கள் ஒரு கவலையான விடயமாகக் காணப்படுவதால், ஸ்திரமான நெல் விலையைப் பேணுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“எமது நாட்டு அரிசிக்கு வெளிநாட்டு சந்தையில் கேள்வி இல்லை. நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியசாலைகள் திறக்கப்படும் போது உங்கள் நெல்லை ஒப்படைத்து விடுங்கள். மேலும் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்த்து நெல்லை வைத்திருக்க வேண்டாம். இல்லையெனில், இந்த முறை ஏற்பட்ட அதே சூழ்நிலை மீண்டும் உருவாகும். நெல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் ஒரு பிரச்சினையாகும். நாம் நெல்லுக்கு ஸ்திரமான விலையொன்றைப் பேண முயல்கிறோம். செலவுகள் அதிகரித்து உற்பத்திச் செலவு கூடும் போது, விலைகளும் அதிகரிக்க வேண்டும். இதனை நாம் கவனித்து, உற்பத்திச் செலவுகளுக்கான மானியங்களை வழங்கும் அதேவேளையில், நெல் விலையை முடிந்தவரை ஸ்திரமாக வைத்திருக்க நடவடிக்கை எடுப்போம்,” என்று அமைச்சர் கூறினார்.
உலகளாவிய சவால்கள் இருந்தபோதிலும், நாட்டில் எந்தவொரு தொழிற்துறையும் வீழ்ச்சியடைய அனுமதிக்கப்படவில்லை எனவும், எரிபொருள் பற்றாக்குறை ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், தனியார் உர நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு உரங்களை வழங்கி, விவசாய சேவை நிலையங்கள் ஊடாக நெல் விவசாயிகளுக்கு அவற்றை விநியோகிப்பதற்குப் பங்களிப்பு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“தனியார் நிறுவனங்கள் சுரண்டுவதற்காக மட்டுமே இருக்கின்றன என்று மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் உர விலைகளும் குறையும். எமது விவசாய சமூகம் பொதுமக்களின் பரந்த நலன்களைக் கருத்தில் கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றும் அவர் மேலும் கூறினார்.