இந்தியா 62 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க முன்வந்துள்ள போதிலும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி குறித்து அரசாங்கம் இறுதி முடிவை எடுக்கவில்லை என அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்காக இந்தியா 62 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது. இரு நாடுகளிற்கும் இடையிலான இணைப்பினை வலுப்படுத்துவதே இதன் நோக்கம்.காங்கேசன்துறை முகத்திற்கும் தென்னிந்தியாவிற்கும் இடையில் கப்பல்சேவையும் இடம்பெறுகின்றது.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இந்த நிதியுதவியை வழங்கியிருந்ததுடன் தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அதனை புதுப்பித்திருந்தது.
எனினும் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கம் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியை முன்னெடுப்பதா இல்லையா என்பது குறித்து இதுவரை உறுதியான முடிவு எதனையும் எடுக்கவில்லை.
இந்த திட்டத்தின் பொருளாதார சமூக சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்கு இன்னமும் நேரத்தை எடுத்துக்கொள்ள அரசாங்கம் விரும்புவதாக துறைமுகங்கள் விவகார பிரதியமைச்சர் ஜனித கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம் இறுதி முடிவை எடுப்பதற்கு இன்னும் ஓரிரு மாதங்கள் தேவைப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
