யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் எவ்வித ஊகங்களுக்கும் இடமளிக்காமல், சுயாதீனமான, பக்கச்சார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு நீதி அமைச்சரிடம் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாகக் கௌரவ நீதி அமைச்சருக்கு அவர் அனுப்பியுள்ள உத்தியோகபூர்வக் கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற ஆள் கடத்தல்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வரும் நியாயமான கோரிக்கையாகும்.
அந்த வகையில், யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தமிழ் மக்களிடையே நீண்டகாலமாக நிலவி வரும் ஆழ்ந்த வேதனையுடனும் ஆதங்கத்துடனும் தொடர்புடைய மிக முக்கியமான மனிதாபிமான மற்றும் நீதித்துறை சார்ந்த விடயமாகும். இவ்விவகாரத்தின் உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள், தடயவியல் ஆய்வுகள் மற்றும் அவற்றின் மூலம் பெறப்படும் சான்றுகள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களுக்குத் தெளிவான பதில்கள் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். இவ்விடயத்தில் எவ்விதமான ஊகங்களுக்கும் அல்லது முன்முடிவுகளுக்கும் இடமளிக்காமல், கிடைக்கப்பெறும் அனைத்து சான்றுகளின் அடிப்படையிலும் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.
எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உரிய சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக, சுயாதீனமான, பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் நீதியான விசாரணை முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துமாறு தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக, இவ்விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்து சான்றுகளும் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு, அவை அறிவியல் மற்றும் தடயவியல் அடிப்படையில் பரிசோதிக்கப்படுவதுடன், விசாரணைகளின் முடிவுகள் சட்டத்திற்கு அமைவாக உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும் பொதுமக்களினதும் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் விசாரணை நடவடிக்கைகள் நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.
இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கோரிக்கை மட்டுமல்ல; மனித உயிர்களின் மதிப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியின் மீதான மக்களின் நம்பிக்கை ஆகியவற்றுடன் தொடர்புடைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும்.
எனவே, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மைகள் முழுமையாகக் கண்டறியப்பட்டு, எவ்விதமான தாமதமுமின்றி நீதியான விசாரணை முன்னெடுக்கப்படுவதையும், அதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.