இலங்கை இந்திய மீனவர் விவகாரம்குறித்து இந்தியாவில் கருத்து தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இது நீண்டகால ,முக்கியமான பிரச்சினை என தெரிவித்துள்ளதுடன் மீனவர் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு சர்வதேச சட்டத்தினை அடிப்படையாக கொண்ட உரிய நடைமுறைப்படுத்தக்கூடிய கட்டமைப்பை இரண்டு நாடுகளும் உருவாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை இந்திய இருதரப்பு உறவுகள் குறித்த நிகழ்வில் செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மீனவர் விவகாரம் மிகவும் முக்கியமானது இரு நாடுகளும் ஒத்துழைத்து உரிய நடைமுறை சாத்தியமான கட்டமைப்பை உருவாக்கவேண்டும்,இது உண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் காணப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடல்சார் கண்டத்தட்டுகள் உயர்கடல் தொடர்பான சட்டங்கள் குறித்த ஐநாவின் விதிமுறைகளை மதிக்கவேண்டும் என தெரிவித்துள்ள சஜித்பிரேமதாச ஒழுங்குபடுத்தப்படாத, சட்டவிரோத,மீன்பிடிக்கு எதிரான இந்த விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளினதும் அரசாங்கங்களும் வருமானம் ஈட்டு நடவடிக்கைகள் சட்டத்திற்கு உட்பட்டதாக காணப்படுவதை உறுதி செய்யவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்
இந்த விவகாரம் வாழ்வாதாரத்துடன் தொடர்புபட்டது என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்,அதேவேளை வருமானம் ஈட்டும் அனைத்து நடவடிக்கைகளும் சட்டபூர்வமானதாக காணப்படுவதை உறுதி செய்யவேண்டும்,என தெரிவித்துள்ள அவர் தெளிவற்ற நிரந்தரமற்ற கட்டமைப்பின் அடிப்படையில் இயங்குவதிலும் பார்க்க இரண்டு தரப்பும் நிரந்தர தீர்வை நோக்கி செயற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.