BBC
Jeremy BowenInternational editor
வெனிசுலா தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ததன் மூலம், டொனால்ட் டிரம்ப் தனது விருப்பத்தின் வலிமையையும், அதற்குப் பின்னால் உள்ள அமெரிக்காவின் அப்பட்டமான இராணுவ பலத்தையும் முன்னெப்போதையும் விட சக்திவாய்ந்த முறையில் நிரூபித்துள்ளார். அவரது உத்தரவின் பேரில், அமெரிக்கா மதுரோவை சிறையிலடைத்துள்ளதுடன், இனி வெனிசுலாவை “நடத்தவும்” (Run) போகிறது.
உலகெங்கிலும் உள்ள அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய இந்த அறிவிப்பை, புளோரிடாவிலுள்ள தனது மார்-ஏ-லாகோ இல்லத்தில் நடைபெற்ற ஒரு குறிப்பிடத்தக்க செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டார். “பாதுகாப்பான, முறையான மற்றும் விவேகமான ஒரு அதிகார மாற்றம் ஏற்படும் வரை” அமெரிக்கா வெனிசுலாவின் பொறுப்பில் இருக்கும் என்று டிரம்ப் கூறினார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, வெனிசுலா துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸுடன் பேசியதாகவும், அதற்கு அவர் “உங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்வோம்” என்று பதிலளித்ததாகவும் டிரம்ப் கூறினார். “அவர் மிகவும் கனிவாக நடந்துகொண்டார் என்று நினைக்கிறேன், ஆனால் அவருக்கு வேறு வழியில்லை” என்று டிரம்ப் மேலும் குறிப்பிட்டார்.
டிரம்ப் இது குறித்த விரிவான விபரங்களை வழங்கவில்லை. இருப்பினும், “தேவைப்பட்டால் தரைப்படை வீரர்களை இறக்க நாங்கள் அஞ்சமாட்டோம்” என்று அவர் கூறினார்.
ஆனால், வெனிசுலாவை ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆட்சி செய்ய முடியும் என்று அவர் நம்புகிறாரா? மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் ஆகியோரால் மார்-ஏ-லாகோவில் வெகுவாகப் பாராட்டப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை, வெனிசுலாவை மறுசீரமைக்கவும், லத்தீன் அமெரிக்கத் தலைவர்களைப் பணிய வைக்கவும் போதுமானதாக இருக்குமா? அவர் அவ்வாறுதான் நம்புவது போல் தோன்றுகிறது.
இருப்பினும், இது எளிதானதாகவோ அல்லது சுமூகமானதாகவோ இருக்காது என்பதற்கான சான்றுகள் உள்ளன.
மதிப்புமிக்க ‘இன்டர்நேஷனல் க்ரைசிஸ் குரூப்’ (International Crisis Group) கடந்த அக்டோபரில் எச்சரித்தபடி, மதுரோவின் வீழ்ச்சி வெனிசுலாவில் வன்முறை மற்றும் ஸ்திரமின்மைக்கு வழிவகுக்கும். அதே மாதம், ‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியின்படி, மதுரோ வீழ்ந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து முதல் டிரம்ப் நிர்வாகத்தின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர அதிகாரிகள் ஆய்வு செய்திருந்தனர். ஆயுதம் ஏந்திய குழுக்கள் அதிகாரத்திற்காகப் போட்டியிடுவதால் வன்முறை குழப்பம் ஏற்படும் என்பதே அவர்களின் முடிவாக இருந்தது.
நிக்கோலஸ் மதுரோவை அகற்றி சிறையிலடைத்தது அமெரிக்க இராணுவ பலத்தின் ஒரு குறிப்பிடத்தக்க வெளிப்பாடாகும். அமெரிக்கா ஒரு பெரிய கடற்படையைத் திரட்டி, ஒரு அமெரிக்க உயிரைக் கூட இழக்காமல் தனது இலக்கை அடைந்தது.

டிரம்பிற்கு வெனிசுலாவின் எண்ணெய் தேவை. அவரது திட்டம் பலிக்குமா? மதுரோ தனது தேர்தல் தோல்வியைப் புறக்கணித்து, வெனிசுலா மக்களின் விருப்பத்தைப் புறக்கணித்தவர் என்பதால், அவர் வெளியேறுவதை அந்த நாட்டு மக்கள் பலர் வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அமெரிக்க நடவடிக்கையின் தாக்கங்கள் வெனிசுலாவின் எல்லைகளுக்கு அப்பால் பலமாக எதிரொலிக்கும்.
மார்-ஏ-லாகோ செய்தியாளர் சந்திப்பில் வெற்றி மனநிலை காணப்பட்டது. அமெரிக்கப் படைகளால் மிகத் துல்லியமாக நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையை அவர்கள் கொண்டாடினர். ஆனால் இராணுவ நடவடிக்கை என்பது முதல் கட்டம் மட்டுமே. கடந்த 30 ஆண்டுகளில் பலவந்தமாக ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய அமெரிக்காவின் வரலாறு மிகவும் மோசமானது.
2003 படையெடுப்பிற்குப் பிறகு ஈராக் ஒரு இரத்தக் களரியாக மாறியது. ஆப்கானிஸ்தானில் இரு தசாப்தங்களாகப் பில்லியன் கணக்கான டொலர்கள் செலவில் மேற்கொள்ளப்பட்ட நாட்டை கட்டியெழுப்பும் முயற்சிகள், 2021 இல் அமெரிக்கா வெளியேறிய சில நாட்களிலேயே துடைத்தெறியப்பட்டன.
இந்த இரு நாடுகளும் அமெரிக்காவின் அருகாமையில் இல்லை. இருப்பினும், லத்தீன் அமெரிக்காவில் கடந்த காலத் தலையீடுகளின் கசப்பான நினைவுகளும், வரவிருக்கும் அச்சுறுத்தல்களும் நம்பிக்கையளிக்கவில்லை.
1823 இல் ஜனாதிபதி ஜேம்ஸ் மன்ரோ வெளியிட்ட ‘மன்ரோ கோட்பாட்டை’ (Monroe Doctrine) விஞ்சிவிட்டதாகக் கூறி, டிரம்ப் அதற்கு ‘டான்ரோ கோட்பாடு’ (Donroe Doctrine) என்று புதிய பெயரிட்டார். “எமது புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் கீழ், மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் இனி ஒருபோதும் கேள்விக்குள்ளாக்கப்படாது,” என்று அவர் கூறினார்.
கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ “தன்னைத் தானே கவனித்துக் கொள்ள வேண்டும்” (watch his ass) என்று அவர் எச்சரித்தார். பின்னர் பாக்ஸ் நியூஸிடம் பேசுகையில், “மெக்சிகோ தொடர்பாக ஏதாவது செய்யப்பட வேண்டும்” என்றார். கியூபாவும் அமெரிக்காவின் பட்டியலில் இருப்பது உறுதி.
டொனால்ட் டிரம்ப் வெனிசுலாவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவது பற்றிப் பேசினார், ஆனால் ஜனநாயகம் பற்றிப் பேசவில்லை. 2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவி மரியா கொரினா மச்சாடோ நாட்டை வழிநடத்த வேண்டும் என்ற கருத்தை அவர் நிராகரித்தார். “அவர் தலைவராக இருப்பது கடினம் என்று நினைக்கிறேன், அவருக்கு ஆதரவோ மரியாதையோ இல்லை,” என்றார். 2024 தேர்தலில் உண்மையான வெற்றியாளர் என்று பல வெனிசுலா மக்களால் கருதப்படும் எட்முண்டோ கோன்சலஸ் பற்றி அவர் குறிப்பிடவே இல்லை.
மாறாக, அமெரிக்கா தற்போது மதுரோவின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸை ஆதரிக்கிறது. மதுரோவை அகற்ற அமெரிக்க இராணுவத்திற்கு உள்ளகத் தகவல்கள் கிடைத்திருந்தாலும், அவரது முன்னோடி ஹ்யூகோ சாவேஸால் உருவாக்கப்பட்ட ஆட்சிமுறை இன்னும் அப்படியே உள்ளது. வெனிசுலா ஆயுதப் படைகள் அமெரிக்கத் திட்டங்களுக்கு உடன்படுவது கடினம்.
வெனிசுலாவில் அமெரிக்கத் தலையீடு டிரம்பின் உலகப் பார்வையைத் தெளிவாகக் காட்டுகிறது. மற்ற நாடுகளின் கனிம வளங்கள் மீதான தனது ஆர்வத்தை அவர் மறைப்பதில்லை. உக்ரைனின் இயற்கை வளங்களில் இருந்து லாபம் பெற ஏற்கனவே முயன்ற அவர், இப்போது வெனிசுலாவின் பாரிய எண்ணெய் இருப்பைக் கட்டுப்படுத்த விரும்புகிறார்.
இது கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளின் அச்சத்தை அதிகரிக்கும். ஆர்க்டிக் பகுதியில் உள்ள அதன் மூலோபாய இருப்பிடம் மற்றும் இயற்கை வளங்களுக்காக கிரீன்லாந்தை இணைக்கும் விருப்பத்தை அமெரிக்கா கைவிடவில்லை.

மதுரோ நடவடிக்கை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் உலகை நடத்தும் கருத்திற்கு விழுந்த மற்றொரு பலமான அடியாகும். ஐரோப்பிய நட்பு நாடுகள், சர்வதேச சட்டத்தை ஆதரிப்பதாகக் கூறிக்கொண்டே, இந்த நடவடிக்கை ஐநா சாசனத்தை மீறுவதாகும் என்று கண்டிக்கத் தயங்குகின்றன.
மதுரோவை ஒரு போதைப்பொருள் கடத்தல்காரனாகக் காட்டி அமெரிக்கா கூறும் நியாயம் பலவீனமானது. மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு சீன இராஜதந்திரிகளைச் சந்தித்திருந்தார். சீனா இந்த நடவடிக்கையை “இறையாண்மை மீறல்” என்று கண்டித்துள்ளது.
இருப்பினும், சீனா இந்த நடவடிக்கையை ஒரு முன்னுதாரணமாகப் பார்க்கலாம். தைவானை தனது ஒரு மாகாணமாகக் கருதும் சீனா, அமெரிக்காவின் இந்தச் செயலைத் தனது நடவடிக்கைகளுக்கு நியாயமாகப் பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்க செனட்டர் மார்க் வார்னர் எச்சரிக்கிறார்.
டொனால்ட் டிரம்ப் தானே விதிகளை உருவாக்குவதாக நம்புகிறார். ஆனால் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவரது நடவடிக்கைகள், வரவிருக்கும் 12 மாதங்கள் உலகளாவிய கொந்தளிப்பு நிறைந்ததாக இருக்கும் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன.