கைத்தொழில் மற்றும் தொழில்முனைாண்மை அபிவிருத்தி அமைச்சு, ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் துறைகள் உள்ளிட்ட வணிகங்களுக்கான இரண்டாம் கட்டப் பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு அளவிலான தொழிலதிபர்களின் கோரிக்கைக்கு இணங்க இந்த மறுபதிவு செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனவரி 16 ஆம் திகதி வரை தொடரும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை அமைச்சில் பதிவு செய்யாத சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்சாலைகளுக்கு 200,000 ரூபா பேரிடர் நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படும் என்றும், அந்தந்த மாவட்டங்களின் பிரதேச செயலகங்கள் ஊடாக விநியோக நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமைச்சின் பகுப்பாய்வின்படி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட துரித அழைப்பிலக்கம் (Hotline) ஊடாக 29,649 ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் சிறு, நடுத்தர வணிகங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளன. மேலதிகமாக, 9,628 ஏற்றுமதி மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் நேரடியாக அமைச்சின் கண்காணிப்பின் கீழ் உள்ளன.
பாதிக்கப்பட்ட அனைத்து வணிகங்களுக்கும் தொடர் ஆதரவு வழங்கப்பட்டு வருவதாகவும், இப்பணிகளில் உதவுவதற்காக 1,500 அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
