சர்வதேச சுற்றுலா தலைமைத்துவ மாநாடு (ITLS) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களுடன் இணைந்ததாக, தேசிய மட்டம் முதல் பாடசாலை மட்டம் வரை பாடசாலை போட்டிகள், ஆராய்ச்சி மன்றங்கள் மற்றும் கைத்தொழில் கண்காட்சிகள் உட்பட, செப்டம்பர் முதல் நடைபெற்ற தொடர்ச்சியான நிகழ்ச்சிகளின் நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. வெளிநாட்டு தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
சுற்றுலா அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், கொழும்பு பல்கலைக்கழக சுற்றுலா பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ பழைய மாணவர் சங்கம் (AATEHM) மற்றும் அதன் நிலைபேறான சுற்றுலா பிரிவு (STU) மற்றும் அந்தப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை , இலங்கை சுற்றுலா மேம்பாட்டு அதிகாரசபை (SLTDA), இலங்கை மாநாட்டு பணியகம் (SLCB), இலங்கை சுற்றுலா செயற்பாட்டாளர்கள் சங்கம் (SLAITO), இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் (SLITHM) என்பன இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தன. சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்காக சிறு மற்றும் நடுத்தர வணிகத் துறைகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பது இதன் நோக்கமாகும்.
“இலங்கை சுற்றுலாவின் எதிர்காலத்திற்கான சுற்றுலா புத்தாக்கம் மற்றும் உறவுகள்” என்ற தலைப்பில் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் மற்றும் புகழ்பெற்ற சர்வதேச நிபுணர்கள் இணைந்த கலந்துரையாடலும் இந்த மாநாட்டுடன் இணைந்தாக நடைபெற்றது.
