இலங்கையின் தொழில்நுட்பத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரியதொரு அங்கீகாரமாக, கொழும்பைத் தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான “சிம்சென்ட்ரிக் டெக்னாலஜிஸ்” (SimCentric Technologies), பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் (UK MoD) மதிப்புமிக்க “டிஃபென்ஸ் யூனிகார்ன்ஸ்” (பாதுகாப்புத் துறையில் பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய நிறுவனங்களை உருவாக்கும்) திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சகத்தின் விரைவுபடுத்தப்பட்ட கொள்முதல் பிரிவான ‘கமர்ஷியல் எக்ஸ்’ (Commercial X) மூலம், உலகளவில் எதிர்கால ராணுவத் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 13 உலகளாவிய நிறுவனங்களில் ஒன்றாக சிம்சென்ட்ரிக் டெக்னாலஜிஸ் இடம்பிடித்துள்ளது.

சிம்சென்ட்ரிக் டெக்னாலஜிஸ் நிறுவனம், உயர் ரக உருவகப்படுத்துதல் (high-fidelity simulation) மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி (VR) எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பப் பயிற்சிச் சூழல்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்றது. இதன் அதிநவீன மென்பொருள்கள் மூலம், உலகெங்கிலும் உள்ள ஆயுதப் படைகள் ஆபத்துகளின்றிப் பாதுகாப்பாகவும், சிக்கலான ராணுவப் பயிற்சிகளைச் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழல்களிலும் மேற்கொள்ள முடிகிறது. இது ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இருவருக்குமான நிஜ உலக அபாயங்களை பெருமளவில் குறைக்கிறது. குறிப்பாக, பிரபல கேமிங் நிறுவனமான எபிக் கேம்ஸின் (Epic Games) ‘அன்ரியல் என்ஜினை’ (Unreal Engine) தொழில்முறை ராணுவ உருவகப்படுத்துதலில் இணைத்த உலகின் முன்னணி முன்னோடி நிறுவனமாக சிம்சென்ட்ரிக் திகழ்கிறது.
இந்த நிறுவனம் பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியாவில் தனது வணிக அலுவலகங்களைக் கொண்டிருந்தாலும், இதன் முழுமையான பொறியியல் ஆற்றல் மையம் (engineering powerhouse) கொழும்பில் உள்ள ‘ஓரியன் சிட்டி’ (Orion City) வளாகத்திலேயே இயங்கி வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் (University of Oxford) தங்களது முனைவர் பட்டப் படிப்பின் போது (PhD) சந்தித்துக் கொண்ட, இலங்கையின் செயற்கை நுண்ணறிவு (AI) நிபுணர் டாக்டர் ரமேஷ் ரணவன மற்றும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் ஆடம் ஈஸ்டன் ஆகியோரால் 2009 ஆம் ஆண்டு இந் நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.
தற்போது, ‘ஸ்லாஸ்கோம்’ (SLASSCOM) அமைப்பின் துணைத் தலைவராகவும் இருக்கும் ஹரிது அபேகுணரத்னவின் (Haridhu Abeygoonaratne) மேலாண்மைப் பணிப்பாளர் தலைமையின் கீழ், 100-க்கும் மேற்பட்ட இலங்கையின் முன்னணிப் பொறியியலாளர்கள் இந் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
ISO 27001 தகவல் பாதுகாப்புச் சான்றிதழைப் பெற்றுள்ள சிம்சென்ட்ரிக் நிறுவனத்தின் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை, உலகளவில் 80-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மற்றும் தொழில்சார் நிறுவனங்கள் நம்பிப் பயன்படுத்தி வருகின்றன. பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சகத்துடனான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம், இலங்கைப் பொறியியலாளர்களின் உலகத்தரம் வாய்ந்த திறமையை வெளிப்படுத்துவதுடன், உலகளாவிய பாதுகாப்புத் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வழிநடத்தும் ஆற்றல் உள்ளூர் திறமையாளர்களுக்கு உண்டு என்பதையும் நிரூபித்துள்ளது