-
BookRetreats.com இணையத்தளத்தினால் 2026ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளதை வரவேற்றுள்ளார்.
-
ஆரோக்கிய சுற்றுலாவின் கீழ், முக்கிய சுற்றுலாச் சந்தைகளில் இன்னும் அறியப்படாத பல உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை இலங்கை கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை 2026ஆம் ஆண்டிற்கான உலகின் மிகச் சிறந்த ஆரோக்கிய சுற்றுலாத் தலமாகத் (world’s top trending wellness destination) தேர்ந்தெடுக்கப்பட்டதை இலங்கை ஹோட்டல்கள் சங்கம் (THASL) நேற்று வரவேற்றுள்ளதுடன், நாட்டின் சுற்றுலா சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளின் கீழ் இதற்கு அதிக கவனமும் ஊக்குவிப்பு முயற்சிகளும் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
BookRetreats.com இன் சமீபத்திய தரவரிசைகளின்படி, ஆரோக்கிய சுற்றுலாவுக்கான இணையத்தளத் தேடல்களில் (traffic) ஆண்டுக்கு ஆண்டு (YoY) 100% வளர்ச்சியைப் பதிவுசெய்து, 2026ஆம் ஆண்டில் உலகின் மிகச் சிறந்த ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.
“இது இலங்கையின் விதிவிலக்கான பாரம்பரிய ஹெள-ஆயுர்வேத (Hela-Ayurveda) மருத்துவம், இயற்கை அழகு மற்றும் முழுமையான நல்வாழ்வுக்கான (holistic healing) வளர்ந்து வரும் நற்பெயருக்குச் சான்றாகும்,” என்று THASL தலைவர் அசோக ஹெட்டிகொட தெரிவித்தார். மேலும், “இலங்கையின் கண்ணோட்டத்தில், சாதாரண ஆரோக்கிய சுற்றுலாவிற்கும் அப்பால், பிரதானமாக ‘ஆயுர்வேதம்’ மற்றும் ‘ஹெள வெதகம’ (Hela Vedakama) ஆகியவையே உலகளாவிய தளங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன,” என்றும் அவர் கூறினார்.
இலங்கையின் ஹோட்டல் நடத்துநர்கள் பல தசாப்தங்களாக சர்வதேச சுற்றுலா கண்காட்சிகள், வீதிப் பிரசாரங்கள் (road shows), டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் மூலம் மேற்கொண்ட கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்தச் செய்தியை உலகிற்கு கொண்டு சேர்த்துள்ளதாக ஹெட்டிகொட குறிப்பிட்டார். இது இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளதுடன், ஆரோக்கிய சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் இலங்கையை மிக உயர்ந்த இடத்தில் நிலைநிறுத்தியுள்ளது என்றார்.
அவரது கூற்றுப்படி, ஆரோக்கிய சுற்றுலா தங்குமிடத் துறையைச் சேர்ந்த (wellness accommodation sector) அதிகளவான சொத்துக்கள்/ஹோட்டல்கள் THASL இன் உறுப்பினர்களாக உள்ளன.
சுற்றுலாப் பயணிகள் உலகின் மிக அழகான இடங்களில் தங்கி ஓய்வெடுக்கும் அதேவேளையில், அவர்களை நம்பகமான நிபுணர்கள், நவீன மருத்துவமனைகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கவனிப்புடன் தடையின்றி இணைப்பதற்கு பல பிரத்தியேக முகவர் நிறுவனங்கள் உழைத்து வருகின்றன. உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளைக் கொண்ட நாடுகளின் போட்டிக்கு மத்தியிலும் இலங்கையின் இந்த சாதனை குறிப்பிடத்தக்கதாகும்.
“‘ஆயுர்வேதம்’ மற்றும் ‘ஹெள வெதகம’ ஆகியவற்றிற்கு இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகளுக்குள் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். இது நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஏற்படுத்துவதோடு, நாட்டின் நற்பெயரைக் கட்டியெழுப்பவும், வெளிநாட்டு நாணய வருவாயை மேம்படுத்தவும் பங்களிக்கும். ஆரோக்கிய சுற்றுலாவின் கீழ், பிரதான சுற்றுலாச் சந்தைகளில் அதிகம் அறியப்படாத பல உலகத்தரம் வாய்ந்த தயாரிப்புகளை இலங்கை பெருமையுடன் முன்வைக்க முடியும்,” என்று அவர் மேலும் கூறினார்.
BookRetreats.com இன் 2026 தரவரிசையில் இலங்கை முதலிடத்தைப் பிடித்தது தற்செயலானது அல்ல என்றும் THASL தலைவர் வலியுறுத்தினார்.
“இது எமது பாரம்பரிய மருத்துவம், மறுளுருவாக்க சுற்றுலா கொள்கை (regenerative tourism policy), நவீன ஆரோக்கிய அறிவியல் மற்றும் உயர்தர விருந்தோம்பல் ஆகியவற்றின் திட்டமிடப்பட்ட ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கிறது. இது உலகளாவிய ரீதியில் ஆரோக்கியத்தை விரும்பும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் அவர்களின் செலவு செய்யும் ஈர்ப்பையும் பெற்றுள்ளது. வணிகத் தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களுக்கு இலங்கையின் இந்த எழுச்சி ஒரு தெளிவான வழிகாட்டலை வழங்குகிறது: மக்களின் கலாச்சார நம்பகத்தன்மை, அளவிடக்கூடிய முடிவுகள் மற்றும் பிரீமியம் விருந்தினர் அனுபவங்களை ஒன்றிணைத்து, அதே நேரத்தில் மக்களையும் இடத்தையும் பாதுகாக்க வேண்டும்,” என்றார்.
“இலங்கை ஆடம்பர ஆரோக்கிய சுற்றுலாவிற்கான (luxury wellness) இறுதி இலக்காக உருவெடுத்து வருகிறது. அதிக செலவு செய்யும் சுற்றுலாப் பயணிகள் இப்போது சாதாரண ஸ்பா (spa) வசதிகளுக்குப் பதிலாக, இயற்கையை அடிப்படையாகக் கொண்ட உண்மையான மருத்துவ முறைகளையே நாடுகின்றனர். இந்த ஆரோக்கிய இயக்கத்தின் அடிப்படை ‘ஹெள வெதகம’ ஆகும். இது இலங்கையின் பூர்வீக மருத்துவ முறையாகும், இது நவீன சுகாதாரத் துறைக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது,” என THASL தலைவர் கூறினார்.
“புராணக் கதைகளின்படி, இந்த மருத்துவ முறை ராவண மன்னனுடன் தொடர்புடையது. அவர் ஒரு சிறந்த மருத்துவராகக் கருதப்படுகிறார். ராவண மன்னன் ‘அர்க பிரகாசய’ (Arka Prakashaya) உள்ளிட்ட அடிப்படை மருத்துவ நூல்களை எழுதிய பெருமைக்குரியவர் என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இது மேம்பட்ட மருந்தியல் வடிகட்டல்களை விபரிக்கிறது.”
“ஹெள வெதகம என்பது ஆழமான செல்லுலார் குணப்படுத்துதலில் (cellular healing) கவனம் செலுத்துகிறது. இது மனித உடலை இயற்கையின் ஒரு நீட்சியாகப் பார்க்கிறது. நவீன ஆடம்பர சுற்றுலாப் பயணிகள் தற்காலிக ஆரோக்கியப் போக்குகளிலிருந்து விலகி, இத்தகைய காலத்தால் சோதிக்கப்பட்ட பாரம்பரிய மரபுவழி சிகிச்சைகளில் அதிகளவில் முதலீடு செய்கிறார்கள்,” என்று ஹெட்டிகொட மேலும் தெரிவித்தார்.
