சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் (Ceylon Newspapers Ltd) நிறுவனத்திற்கு எதிராகக் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான விசாரணையை முன்னெடுக்குமாறு தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். ஊழியர் சேமலாப நிதி (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) பங்களிப்புகள் செலுத்தப்படாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்தே இந்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொழிலாளர் அமைச்சு இன்று (3) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், சம்பளம் மற்றும் பணிக்கொடை (Gratuity) வழங்கப்படாமை, அத்துடன் ஊழியர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டமை போன்ற புகார்கள் குறித்தும் இந்த விசாரணை உள்ளடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அவ்வறிக்கையின்படி, நிறுவனத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் குறித்து விரிவான விசாரணையை நடத்துமாறு பிரதி அமைச்சர், தொழிலாளர் ஆணையாளர் நாயகத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
‘மவ்பிம’ (Mawbima) மற்றும் ‘சிலோன் டுடே’ (Ceylon Today) உள்ளிட்ட பல முன்னணிப் பத்திரிகைகளை வெளியிடும் சிலோன் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனம், முன்னாள் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.