லங்கைக்கு விமான சேவைகளை வழங்குவதற்காக அதிகளவிலான வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தயாராகி வருவதால், நாட்டின் சர்வதேச விமானத் தொடர்புகள் மேலும் பலப்படும் என்று சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வியட்நாம் ஏர்லைன்ஸ் (Vietnam Airlines), வியட்ஜெட் (VietJet), ஜெட்ஸ்டார் (Jetstar), பிரிட்டிஷ் எயர்வேஸ் (British Airways), பிரெஞ்ச் பீ (French Bee), எஸ்7 ஏர்லைன்ஸ் (S7 Airlines – JSC Siberia Airlines) மற்றும் சூப்பர்நோவா ஏர்லைன்ஸ் (Supernova Airlines) ஆகிய விமான நிறுவனங்கள் இலங்கையிற்கான தங்களது சேவைகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். அதே நேரத்தில், டர்கிஷ் ஏர்லைன்ஸ் (Turkish Airlines), எமிரேட்ஸ் (Emirates) மற்றும் கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) ஆகிய நிறுவனங்கள் தங்களது விமான சேவை எண்ணிக்கைகளை (frequencies) அதிகரித்துள்ளன. அத்துடன், பங்களா ஏர்லைன்ஸ் (Bangla Airlines) மற்றும் சென்ட்ரம் ஏர் (Centrum Air) ஆகிய நிறுவனங்களுடன் எதிர்கால செயல்பாடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் ஏவியேஷன் வொய்ஸ் (Aviation Voice) செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மேலதிக விமான சேவைகள் நாட்டின் வான்வழித் தொடர்பை மேம்படுத்தவும், கிடைக்கக்கூடிய இருக்கை வசதிகளை அதிகரிக்கவும் மற்றும் நாட்டின் விமான போக்குவரத்துத் துறையின் மீட்சிக்கு ஆதரவளிக்கவும் உதவும் என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
