தாய்வான்
ஸுல்பிக் ஃபர்ஸான் (Zulfick Farzan)
ஜூலை 21, 2026
இலங்கை பிரஜைகளுக்கான திருத்தப்பட்ட விசா தேவைகளை தாய்வான் அறிவித்துள்ளது. இதில் சுற்றுலா விசா விண்ணப்பங்களை நிறுத்தி வைத்தல் மற்றும் தகுதியுள்ள பயணிகளுக்குக் கூடுதல் ஆவணத் தேவைகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
இலங்கை விண்ணப்பதாரர்களுக்கான விசா விவகாரங்களைக் கையாழும் சென்னையிலுள்ள ‘தைபே பொருளாதார மற்றும் கலாச்சார மையம்’ (Taipei Economic and Cultural Center), இலங்கை பிரஜைகளிடமிருந்து சுற்றுலா விசா விண்ணப்பங்கள் இனி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளது. ஜூலை 18, 2026 அன்று வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட அறிவிப்பின்படி, இலங்கையர்கள் குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
திருத்தப்பட்ட கொள்கையின் கீழ், தாய்வான்அரசாங்க முகவர் நிலையங்களின் அழைப்பின் பேரில் உத்தியோகபூர்வ விஜயங்கள், சட்டப்பூர்வ சர்வதேச மாநாடுகள் அல்லது நிகழ்வுகளில் பங்கேற்பது, மூன்றாம் நிலை உறவினர்கள் அடங்கிய குடும்ப விஜயங்கள், வணிகச் செயல்பாடுகள், கப்பல்களில் மாலுமிகளாக இணைவது அல்லது குறுகிய கால மருத்துவ சிகிச்சை ஆகிய நோக்கங்களுக்காக மட்டுமே இலங்கை பிரஜைகள் தைவானுக்கான நுழைவு விசாக்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வகைகளின் கீழ் பயணிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தைவானிலுள்ள ஒரு உத்தரவாதமளிப்பவரால் (guarantor) வழங்கப்பட்ட ‘உத்தரவாதக் கடிதத்தைச்’ (Letter of Guarantee) சமர்ப்பிக்க வேண்டும். அந்த உத்தரவாதமளிப்பவர் ‘ தாய்வான்தேசிய அடையாள அட்டையைக்’ கொண்டிருக்க வேண்டும், மேலும் அந்த உத்தரவாதக் கடிதம் தைவானின் தூதரக விவகாரப் பணியகம் (BOCA), வெளியுறவு அமைச்சகத்தின் கிளை அலுவலகம் அல்லது வெளிநாட்டிலுள்ள தைவான் தூதரகப் பணியகத்தால் சான்றளிக்கப்பட்டிருக்க வேண்டும் (authenticated).
வழக்கமான விசா விண்ணப்பத் தேவைகளுடன் கூடுதலாக, இலங்கை விண்ணப்பதாரர்கள் பொலிஸ் சான்றிதழ் (Police Clearance Certificate), நிதித் திறன் சான்று, தாய்வான்தங்கும் காலத்திற்கான தங்குமிடம் பற்றிய சான்று மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட இருவழி அல்லது அடுத்தகட்டப் பயண விமானப் பயணச்சீட்டு (return/onward ticket) ஆகியவற்றை வழங்க வேண்டும்.
சீனக் குடியரசின் (தாய்வான்)வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக விவகாரப் பணியகத்தின் கூற்றுப்படி, தைவானின் நியமிக்கப்பட்ட நாடுகளுக்கான (designated countries) விசா ஏற்பாடுகள் ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, பங்களாதேஷ், பூட்டான், கமரூன், கம்பியா, கானா, ஈராக், நேபாளம், நைஜர், நைஜீரியா, பாகிஸ்தான், செனகல், சோமாலியா மற்றும் சிரியா உள்ளிட்ட மேலும் பல நாடுகளின் பிரஜைகளுக்கும் பொருந்தும்.
