இலங்கையில் சீன பிரஜைகளின் மோசடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இன்டர்போலுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இதனை தெரிவித்துள்ளார்.
சுற்றுலா விசாவில் இலங்கை சென்று மோசடிகளில் ஈடுபடும் சீன பிரஜைகள் பின்னர் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எல்லை கடந்த சூதாட்டம் மோசடி போன்றவற்றில் ஈடுபடும் தனது பிரஜைகளிற்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து சீனா தீவிரமாக உள்ளது.
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சமீபத்தில் சந்தித்தவேளை இது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
எல்லை கடந்த சூதாட்டம் மோசடிகள் போன்றவற்றை கட்டுப்படுத்துவதற்காக இரண்டு நாடுகளும் சட்ட அமுலாக்கல் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்றவற்றை மேலும் வலுப்படுத்தவேண்டும்,இவ்வாறான குற்றங்களிற்கு எதிராக உறுதியுடன் போராடவேண்டும் என சீனா பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்தவிஜயபால இவ்வாறான குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அதிகாரிகள் இன்டர்போலுடன் தொடர்பில் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் இலங்கைக்கு உச்சிமாநாடு ஒன்றிற்காக விஜயம் மேற்கொண்டிருந்த இன்டர்போல் அதிகாரிகள் சீன பிரஜைகளின் இவ்வாறான குற்றங்களை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ந்தனர் என அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
சீனா எங்களுடன் ஒத்துழைக்கின்றது இந்த மோசடிக்காரர்கள் சீனாவிலிருந்து பணத்தை மோசடி செய்கின்றனர் இதற்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டநடவடிக்கைகளிற்காக நாடு கடத்தப்படுகின்றனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 80 பேர் கைதுசெய்யப்பட்டு சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
