வெலிகம பிரதேசசபை தலைவர் கொலைசந்தேகநபர் விசாரணை செய்யப்படுவதை பொலிஸார் வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
பொலிஸ் பேச்சாளர் எவ்யூவூட்லர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெறுவதை வீடியோவில் பதிவு செய்து வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது அது சந்தேகநபருக்கும் எதிர்கால விசாரணைகளிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.
மூன்றாம்தரப்பொன்று வீடியோவை பதிவு செய்வதில் ஈடுபட்டதா அல்லது பொலிஸாருக்கு இதில் தொடர்புள்ளதா என்பதை கண்டறிவதற்காக விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சந்தேகநபரை ஊடகங்கள் முன்னிலையில் பொலிஸார் விசாரணை செய்ததை இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலியபீரிஸ் கண்டித்துள்ளார்.
கைதுகள் மற்றும் குற்றவியல் விசாரணைகளை சட்டத்தினால் நிறுவப்பட்ட நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சந்தேநபர்களை ஊடகங்களின் முன்னால் காட்சிப்பொருளாக்குவது , அவர்கள் அறிக்கைகளை வெளியிடச்செய்வது,அத்தகைய காட்சிகளை ஒளிபரப்புவது பொதுமக்களின் சில பிரிவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடும் ஆனால் விசாரணை ஆரம்பமானவுடன் வழக்குதொடருநருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சாலியபீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுபிள்ளைதனமான செயல்கள் பொலிஸாரின் மதிப்பு கௌரவத்தை உயர்த்துவதற்கு உதவப்போவதில்லை,மாறாக எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் இது விசாரணையாளர்களின் தொழில்முறை தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றது முழு பொலிஸ் கட்டமைப்பிற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.
