வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நாளை இரவு இலங்கையில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் பலத்த மழை,மண்சரிவு மற்றும் அவசர வெளியேற்றங்களுக்குத் தயாராக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மற்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளன.
வானிலை ஆய்வு மையத்தின் தகவல்படி, தீவின் தென்கிழக்கே நிலைகொண்டுள்ள இந்த அமைப்பு, மேற்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடமேற்கு திசையாகத் திரும்பி, நாளை (ஜனவரி 9) மாலை 5.30 மணி முதல் இரவு 11.30 மணிக்குள் ஹம்பாந்தோட்டைக்கும் கல்முனைக்கும் இடையே கரையை கடக்கும்.
மண்சரிவுஅபாய எச்சரிக்கை
மத்திய மலைநாட்டின் கிழக்குப் சரிவுகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதால், பின்வரும் மாவட்டங்களில் உள்ள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு அவசர மண்சரிவுஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஜனவரி 9 ஆம் திகதி மதியத்திற்கு முன்னதாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:
-
கண்டி மாவட்டம்: மினிப்பே, மெததும்பர, பன்விலை, தொலுவ, தெல்தொட்ட மற்றும் உடுதும்பர.
-
பதுளை மாவட்டம்: கந்தகெட்டிய, பஸ்ஸறை, பதுளை, லுணுகலை, ஹப்புத்தளை, எல்ல, பண்டாரவளை, ஹாலி எல, வெலிமடை, மீகஹகிவுல மற்றும் ஊவா பரணகம.
-
மாத்தளை மாவட்டம்: வில்கமுவ, அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை, நாவுல, உகுவெல மற்றும் லக்கல பல்லேகம.
-
நுவரெலியா மாவட்டம்: வலப்பனை, நில்தண்டாஹின்ன, மதுரட்ட, ஹங்குரன்கெத்த மற்றும் நுவரெலியா.
முக்கிய அறிவுறுத்தல்கள்:
-
வெளியேற்றம்: மண்சரிவு அறிகுறிகள் தென்படும் இடங்கள், மலைச்சரிவுகள் மற்றும் பள்ளத்தாக்குகளில் வசிப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
-
பாதுகாப்பு: நிலச்சரிவு ஏற்பட்டால், NBRO அதிகாரிகள் ஆய்வு செய்து அனுமதி வழங்கும் வரை மக்கள் பாதுகாப்பான இடங்களிலேயே இருக்க வேண்டும்.
-
முப்படையினர் தயார்நிலை: வெள்ளம் மற்றும் நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்காக முப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். உணவு, நீர் மற்றும் மருத்துவ உதவிகளுக்கு அவசர இலக்கமான 117 ஐத் தொடர்பு கொள்ளலாம்.
-
பயணக் கட்டுப்பாடு: அதிக அபாயம் உள்ள பகுதிகளுக்கு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
