இலங்கைக்கு ஈரானின் பெட்ரோல் எரிவாயுக்களை விநியோகம் செய்வதற்கு உதவிய நிறுவனங்களிற்கு அமெரிக்கா விதித்துள்ள தடை காரணமாக இலங்கையின்பெட்ரோலிய இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்படாது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தடைவிதித்துள்ள நிறுவனங்கள் எவற்றுடனும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கான விநியோகஸ்தர்கள் எந்தவொரு செயற்பாட்டு வணிக தொடர்புகளை கொண்டிருக்கவில்லை இதனால் இலங்கை எரிசக்தி கொள்முதலிற்கு பயன்படுத்தும் மார்க்கங்கள் பாதிக்கப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோலியம் டீசல் போன்றவற்றுடன் எந்த தொடர்பும் இல்லாத நிறுவனத்திற்கே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
தடைகளை எதிர்கொண்டுள்ள நிறுவனங்களுடன் லிட்ரோ காஸிற்கு எந்த தொடர்பும் இல்லை,சீனாவின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீதான தடையால் இலங்கையில் சீனாவின் முதலீடுகளிற்கு எந்த பாதிப்பும் இல்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் எரிவாயு இலங்கைக்கு கிடைப்பதற்கு உதவியாக செயற்பட்ட ஐக்கிய அரபு இராச்சிய நிறுவனங்களிற்கு எதிராக அமெரிக்கா தடைவிதித்துள்ளது.
அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் வெளிநாட்டு சொத்துக்கட்டுப்பாடுகளிற்கான திறைசேரி அலுவலகம் இந்த தடைகளை அறிவித்துள்ளது.
ஈரானின் எரிவாயுக்கள் இலங்கைக்கு கப்பல் மூலம் சென்றடைவதற்கு உதவியாக இருந்த நிறுவனங்கள் உட்பட ஈரானின் எரிவாயு விநியோகத்திற்கு உதவிய 50க்கும் நிறுவனங்கள் தனிநபர்கள் கப்பல்களிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் 2024-2025 இல் மில்லியன் கணக்கிலான எரிவாயுக்கள் ஈரானிலிருந்து இலங்கையை சென்றடைவதற்கு உதவியாக செயற்பட்டன என தெரிவித்துள்ள அமெரிக்கா மக்ஸ்ஸ்டார் காஸ்டியோர் போன்ற கப்பல்கள் பல தடவை எரிவாயு விநியோகத்தில் ஈடுபட்டன என தெரிவித்துள்ளது.
