இலங்கையர்களால் தொடங்கப்பட்ட அப்சர்வபிலிட்டி (Observability) தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் (Startup) நிறுவனமான ‘எக்ஸ்ஸ்கேலர் லேப்ஸ்’ (xScaler Labs), அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ‘எக்ஸ்டாகாம்’ (ExtaCom) இன் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஜிம் வியாட் (Jim Wyatt) உடன் ஒரு மூலோபாய கூட்டு முயற்சியை (Strategic Joint Venture) அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் சர்வதேச விரிவாக்கப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இலங்கை பொறியியலாளர்களான பதும் பெர்னாண்டோ மற்றும் கமுனு பாலகல்ல ஆகியோரால் தொடங்கப்பட்ட ‘எக்ஸ்ஸ்கேலர் லேப்ஸ்’, பொறியியல் குழுக்கள் எதிர்கொள்ளும் அப்சர்வபிலிட்டி உள்கட்டமைப்பு சார்ந்த சவால்களான – அதிகரித்து வரும் செலவுகள், செயல்பாட்டு சிக்கல்கள் மற்றும் அளவிடுதல் வரம்புகள் (Scalability limitations) போன்றவற்றுக்கு தீர்வு காண்பதற்காக உருவாக்கப்பட்டது. சிக்கலான பின்தள உள்கட்டமைப்பை (Backend infrastructure) இயக்க வேண்டிய சுமை இல்லாமல், நிறுவனங்கள் தங்களின் தரவுகள் (Metrics), பதிவுகள் (Logs) மற்றும் தடயங்களை (Traces) எளிதாக நிர்வகிக்க உதவும் நவீன அப்சர்வபிலிட்டி தளத்தை இந்த நிறுவனம் வழங்குகிறது.
இந்த புதிய கூட்டாண்மை, அமெரிக்காவில் எக்ஸ்ஸ்கேலர் லேப்ஸின் உள்ளூர் இருப்பை வலுப்படுத்துவதன் மூலமும், வணிக மேம்பாட்டு முயற்சிகளை விரிவுபடுத்துவதன் மூலமும், புதிய பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமும் அங்கு நிறுவனத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கூட்டு முயற்சியின் மூலம், வட அமெரிக்கா முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு மேம்பட்ட வாடிக்கையாளர் ஈடுபாடு மற்றும் உள்ளூர்மயமாக்கப்பட்ட ஆதரவை வழங்கும் அதே வேளையில், அப்சர்வபிலிட்டி, கண்காணிப்பு மற்றும் செயல்திறன் மேலாண்மை தீர்வுகளை வழங்குவதற்கான தனது திறனை எக்ஸ்ஸ்கேலர் லேப்ஸ் மேலும் வலுப்படுத்தும்.
இந்த நடவடிக்கை, உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் எக்ஸ்ஸ்கேலர் லேப்ஸின் வளர்ந்து வரும் நிலையை உறுதிப்படுத்துவதுடன், சர்வதேச சந்தைகளில் போட்டியிட்டு விரிவடைவதற்கும், இலங்கையர்களால் தொடங்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இருக்கும் திறனையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
நிறுவனம் தொடர்ந்து தனது எல்லையை விரிவுபடுத்தி வரும் வேளையில், உலகெங்கிலும் உள்ள பொறியியல் குழுக்களுக்கு நம்பகமான அப்சர்வபிலிட்டி மற்றும் டிஜிட்டல் செயல்பாட்டு பங்காளியாக மாற வேண்டும் என்ற அதன் தொலைநோக்கு பார்வையை நோக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க படியாக இந்த கூட்டாண்மை அமைந்துள்ளது.
