பணிச்சூழலை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் தொழிலாளர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை தொழிலாளர் அமைச்சரும் பிரதி நிதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜெனீவாவில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எஃப். ஹூங்போ (Gilbert F. Houngbo) உடனான சந்திப்பின் போது, தொழிலாளர் சட்டங்களை மேம்படுத்துவதையும் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சர் விவரித்தார்.
இந்த முயற்சிகளுக்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ஆதரவையும் அவர் கோரியதுடன், பணியிடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பது தொடர்பான 190 வது உடன்படிக்கையை (Convention No. 190) இலங்கை அண்மையில் அங்கீகரித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
மேலும், மீன்பிடித் துறையில் வேலை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக, மீன்பிடி வேலை தொடர்பான 188 வது உடன்படிக்கையை (Convention No. 188) அங்கீகரிப்பது குறித்தும் அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
சர்வதேச தொழிலாளர் தரநிலைகளுடன் இணங்கிப் போவதற்காக இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளை வரவேற்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம், எதிர்கால சீர்திருத்தங்களுக்குத் தேவையான தொடர்ச்சியான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.
