இலங்கையின் நாணயக் கொள்கை கட்டமைப்பு உடன்படிக்கையை (MPFA) முன்கூட்டியே மறுபரிசீலனை செய்யுமாறு முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், நாட்டின் நடுத்தர கால பணவீக்க இலக்கை (Medium-term inflation target) தற்போதைய 5% இலிருந்து 2% க்கும் 3% க்கும் இடைப்பட்ட மட்டத்திற்குக் குறைக்குமாறும் அவர் முன்மொழிந்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளதாவது; அப்போதைய நிதி அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் 2023 ஒக்டோபரில் கையெழுத்திடப்பட்ட நாணயக் கொள்கை கட்டமைப்பு உடன்படிக்கையானது, இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் 2026 ஒக்டோபரில் அதன் சட்டப்பூர்வ மறுபரிசீலனைக்கு (Statutory review) உட்படுத்தப்படவுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து (நாட்டின் கடன் மறுப்பு, நாணய மதிப்பிழப்பு மற்றும் குடும்பங்களின் கொள்வனவுச் சக்தி கடுமையாக வீழ்ச்சியடைந்த சூழலில்), தற்போதுள்ள பணவீக்க இலக்கு இன்னும் பொருத்தமானதாக இருக்குமா என்பதை மறுமதிப்பீடு செய்வதற்கு இந்த ஆய்வு ஒரு முக்கியமான வாய்ப்பை வழங்குகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பணவீக்கமானது உள்நாட்டுத் தேவையின் அதிகரிப்பால் அல்லாமல், நாணய மாற்று வீத வீழ்ச்சி, இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் செலவுகள், உணவு விநியோகத் தடங்கல்கள், பயன்பாட்டுக் கட்டண திருத்தங்கள் (Utility tariff revisions) மற்றும் உலகளாவிய பொருட்களின் விலை நகர்வுகள் போன்ற விநியோகத் தரப்பு (Supply-side) மற்றும் வெளிப்புறக் காரணிகளாலேயே பெரும்பாலும் தூண்டப்பட்டுள்ளது என்று கருணாநாயக்க வாதாடியுள்ளார்.
வட்டி வீத மாற்றங்களை (Interest rate adjustments) மட்டுமே நம்பியிருப்பது பணவீக்கத்தின் கட்டமைப்பு ரீதியான காரணிகளுக்குத் தீர்வாகாது என எச்சரித்துள்ள அவர், நாடு தேக்கநிலை பணவீக்க (Stagflation) சூழலுக்குள் தள்ளப்படும் அபாயம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இச்சூழலில் பலவீனமான பொருளாதார வளர்ச்சியுடன் தொடர்ச்சியான பணவீக்கமும் நீடிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வெளிநாட்டு நாணயக் கையிருப்பை உருவாக்குதல், உள்நாட்டுச் சேமிப்பை ஊக்குவித்தல், மூலதன உருவாக்கத்தை ஊக்குவித்தல், உற்பத்திச் முதலீடுகளுக்கு ஆதரவளித்தல், ஏற்றுமதிப் போட்டித்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை ரூபாயின் நீண்டகால மதிப்பைத் தக்கவைத்தல் ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நாட்டின் நாணயக் கொள்கைக் கட்டமைப்பை விரிவுபடுத்துமாறும் முன்னாள் அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பின்பற்றும் பணவீக்க இலக்குகளை மேற்கோள் காட்டிய கருணாநாயக்க, குறைவான மற்றும் நிலையான பணவீக்கக் குறிக்கோள்கள் வலுவான பொருளாதார வளர்ச்சிக்கும் நாணய நம்பகத்தன்மைக்கும் பங்களித்துள்ளதாகக் கூறினார்.
பணவீக்கத்தின் செயல்திறன், கையிருப்பு குவிப்பு, நாணய மாற்று வீத ஸ்திரத்தன்மை மற்றும் நாணயக் கொள்கைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பு குறித்து மத்திய வங்கி பாராளுமன்றத்திற்கு வழங்கும் அறிக்கையிடலை மேம்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
2026 ஒக்டோபர் மறுபரிசீலனைக்கான ஆயத்தங்களை முன்கூட்டியே ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ள கருணாநாயக்க, ரூபாயின் மதிப்பைப் பாதுகாப்பது, குடும்பச் சேமிப்பைப் பாதுகாப்பது மற்றும் எதிர்கால செலுத்துமதி நிலுவை (Balance-of-payments) நெருக்கடிகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட மிகவும் விரிவான நாணயக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
