தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள COEX வளாகத்தில் ஜூன் 4 முதல் 7 ஆம் திகதி வரை நடைபெற்ற 41 ஆவது சியோல் சர்வதேச சுற்றுலா விழாவில் (Seoul International Travel Fair – SITF 2026) இலங்கை சுற்றுலாத் துறை சர்வதேச பாராட்டுக்களைப் பெற்றுள்ளதுடன், உலகளாவிய சுற்றுலாத் துறையில் நாட்டின் வளர்ந்து வரும் நன்மதிப்பை வெளிப்படுத்தும் வகையில் நான்கு புகழ்பெற்ற விருதுகளையும் வென்றுள்ளது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, இலங்கையின் சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்கவிற்கு, நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அவரது தலைமைத்துவம் மற்றும் பங்களிப்பைப் பாராட்டி “2026 SITF சிறந்த சுற்றுலா முன்னோடி விருது” (Eminent Tourism Pioneer Award) வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
கல்வித்துறை மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்த தாக்கங்கள் இரண்டையும் மதிப்பீடு செய்யும் SITF சுற்றுலா விருதுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான தெரிவு செயல்முறையைத் தொடர்ந்தே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில், தென்கொரியாவைச் சேர்ந்த மூவர் மற்றும் மூன்று சர்வதேச வெற்றியாளர்கள் என மொத்தம் ஆறு நபர்கள் மட்டுமே இவ்விருதின் மூலம் கௌரவிக்கப்பட்டனர். இந்த சுற்றுலா விழாவின் 41 ஆண்டுகால வரலாற்றில் இவ்விருதைப் பெற்ற முதல் இலங்கை நாட்டவர் பேராசிரியர் ரணசிங்க ஆவார்.
இந்த தனிநபர் விருதுக்கு மேலதிகமாக, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் (SLTPB) மேலும் மூன்று முக்கிய விருதுகளைக் கைப்பற்றியுள்ளது:
-
சிறந்த மக்கள் கவர்ந்த சாவடி விருது (Best Popular Booth Award)
-
சிறந்த சாவடி வடிவமைப்பு விருது (Best Booth Design Award)
-
சிறந்த கலைநிகழ்ச்சி விருது (Best Performance Award)

இலங்கையின் பாரம்பரிய கலாசாரக் காட்சிகள், ஊடாடும் கண்காட்சிகள் மற்றும் பாரம்பரிய உபசரிப்பு ஆகியவற்றின் மூலம் இலங்கை அரங்கு (Pavilion) ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்திருந்தது. இலங்கையின் பாரம்பரியம் மற்றும் எம்பிக்கே (Embekke) மரச் சிற்பக் கலைகளினால் ஈர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட அரங்கின் தோற்றமும், பாரம்பரிய நடனக் கலைஞர்கள் மற்றும் மேளக்காரர்களின் துடிப்பான கலைநிகழ்ச்சிகளும் சர்வதேச பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்கு மத்தியில் இலங்கை தனித்து விளங்கியதுடன், நாட்டின் சுற்றுலா சந்தைப்படுத்தல் மற்றும் கலாசார ஊக்குவிப்பு முயற்சிகளுக்குக் கிடைத்த பலத்த அங்கீகாரமாக அமைந்த இந்த விருதுகள், கடந்த ஜூன் 7 ஆம் திகதி நடைபெற்ற SITF 2026 நிறைவு விழாவில் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன
