விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் (Logistics), உற்பத்தித் துறை, புதுப்பிக்கத்தக்க சக்தி, பசுமைத் தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவற்றில் ஜெர்மனியுடன் இலங்கைக்குக் கணிசமான பொருளாதார வாய்ப்புகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள ஜெர்மனி தூதுவர் பெலிக்ஸ் நியூமேன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
“வணிகங்களை ஒன்றிணைப்பதற்கும் தடைகளைக் குறைப்பதற்கும் தொடர்ச்சியான வர்த்தக வசதிகள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் டிஜிட்டல் கட்டமைப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றின் அவசியத்தை தூதுவர் வலியுறுத்தினார். அத்துடன், நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் மீளெழுச்சிக்கு சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்கு அமைவான நடைமுறைகளின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்,” என்று இலங்கை-ஜெர்மனி வர்த்தகச் சபை (SLGBC) தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் ஜெர்மனிக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக, தொழில்துறை தலைவர்கள், இராஜதந்திரிகள் மற்றும் வணிக வல்லுநர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்ட ‘இலங்கை-ஜெர்மனி வர்த்தகச் சபையின் உறுப்பினர்கள் தின’ (SLGBC Members’ Day) நிகழ்வில் முதன்மை உரை நிகழ்த்திய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கையில் ஜெர்மனிய வணிக நிறுவனங்களின் கணிசமான பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும், இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பிற்கான எதிர்கால வாய்ப்புகளை ஆராய்வதற்கும் இந்த நிகழ்வு ஒரு சிறந்த தளமாக அமைந்தது.
இலங்கையின் பொருளாதாரத்துடன் ஜெர்மனி கொண்டுள்ள நீண்டகால ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்திய நியூமேன், இருதரப்பு ஈடுபாட்டின் முக்கிய துறைகள் குறித்தும் விரிவாகப் பேசினார்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும், வணிக ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் தமது சபை அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக இலங்கை-ஜெர்மனி வர்த்தகச் சபையின் தலைவர் ஜெரார்ட் விக்டோரியா (Gerard Victoria) தெரிவித்தார்