மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலைமைகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், கொழும்பு பங்குச்சந்தையின் (CSE) இரு பிரதான சுட்டிகளும் புதன்கிழமையன்று மேலும் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. உலகளாவிய ரீதியில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்து வருகின்றமை மற்றும் நீண்டகால பூகோள அரசியல் நிச்சயமற்ற தன்மையால் ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்புகள் குறித்த கவலைகளால் சந்தையில் பரவலான விற்பனை அழுத்தம் (selling pressure) ஏற்பட்டது. இதன் காரணமாக, பிராந்திய பங்குச்சந்தைகளின் பலவீனத்தை பிரதிபலிக்கும் வகையில் கொழும்பு பங்குச்சந்தையும் எதிர்மறையான போக்குடன் ஆரம்பமானது.
அமர்வின் இரண்டாம் பாதியில் சந்தை தனது ஆரம்பகால இழப்புகளில் சிலவற்றை மீட்டெடுத்த போதிலும், நாள் முழுவதும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு எச்சரிக்கை உணர்வே காணப்பட்டது. எவ்வாறாயினும், சந்தை நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியிலும், அடிப்படையில் வலுவான சில நிறுவனங்களின் பங்குகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். அத்துடன், ‘குரோசிங் கொடுக்கல் வாங்கல்கள்’ (crossing transactions) மூலம் மதிப்புமிக்க பங்குகளில் முதலீடு செய்ய முற்பட்டதும் அவதானிக்கப்பட்டது.

அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 133.80 புள்ளிகளால் (0.61%) வீழ்ச்சியடைந்து 21,828.50 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதேவேளை, S&P ஸ்ரீலங்கா 20 சுட்டெண் (S&P SL20) 35.98 புள்ளிகளால் (0.59%) சரிவடைந்து 6,099.52 புள்ளிகளாகப் பதிவானது. இந்த அமர்வில் 210.21 மில்லியன் பங்குகள் கைமாறியதுடன், மொத்த சந்தை வருவாய் (turnover) 2.25 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது. இது முந்தைய அமர்வுகளுடன் ஒப்பிடுகையில் மேம்பட்ட ஒரு செயல்பாடாகும், இதற்கு பிரதானமாக ‘குரோசிங்’ கொடுக்கல் வாங்கல்களே ஆதரவளித்தன.
மூலதனப் பொருட்கள் (Capital Goods) துறையானது 22.21 மில்லியன் பங்குகள் பரிமாற்றப்பட்டு 0.44 பில்லியன் ரூபா வருவாயை ஈட்டியதன் மூலம் சந்தை வருவாயில் அதிக பங்களிப்பை வழங்கிய துறையாக உருவெடுத்தது. இத்துறையில் JKH.N பங்குகள் முன்னிலை வகித்து 0.44 பில்லியன் ரூபா வருவாயைப் பதிவு செய்தன. ‘குரோசிங்’ கொடுக்கல் வாங்கல்கள் 1.14 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியிருந்ததுடன், இது மொத்த சந்தை வருவாயில் 50% ஆகும். இதில் அதிகபட்சமாக COCO.N பங்குகளில் 18.00 மில்லியன் பங்குகள் பரிமாற்றப்பட்டு 0.45 பில்லியன் ரூபா பெறுமதியான ‘குரோசிங்’ பதிவாகியிருந்தது.
சந்தையின் ஒட்டுமொத்தப் போக்கு பலவீனமாகவே இருந்தது. அமர்வின் இறுதியில் ஏற்பட்ட பகுதியளவு மீட்புக்கு மத்தியிலும், 47 பங்குகள் விலையுயர்வைச் சந்தித்த வேளையில் 152 பங்குகள் விலைவீழ்ச்சியைக் கண்டன. இது சந்தையில் தொடரும் விற்பனை அழுத்தத்தைக் காட்டுகிறது. அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்ணிற்கு (ASPI) சாதகமான பங்களிப்பை வழங்கியவற்றுள் RICH.N முன்னிலை வகித்தது (7.35 புள்ளிகள் சேர்க்கப்பட்டது). இதனைத் தொடர்ந்து ASPH.N, HNB.N, SLTL.N மற்றும் SDB.N ஆகிய பங்குகள் பங்களிப்பு செய்தன. மறுபுறம், SAMP.N பங்குகள் சுட்டெண்ணை 9.82 புள்ளிகளால் வீழ்த்தி சந்தைக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தியதுடன், HAYL.N, DIAL.N, LOLC.N மற்றும் MELS.N ஆகிய பங்குகளும் ஒட்டுமொத்த சந்தை வீழ்ச்சிக்குக் காரணமாயின.
குறிப்பிடத்தக்க வர்த்தகங்களில், ASPH.N பங்குகள் 104.50 மில்லியன் பங்குகள் பரிமாற்றப்பட்டு 0.07 பில்லியன் ரூபா வருவாயுடன் பலத்த செயல்பாட்டைப் பதிவு செய்தன. இப்பங்கு இந்த அமர்வில் 60.00% விலையுயர்வைப் பெற்று, அன்றைய தினத்தின் மிக வலுவான செயல்பாட்டைக் காட்டிய பங்குகளுள் ஒன்றாக உருவெடுத்தது. ஒட்டுமொத்தமாக, முதலீட்டாளர்கள் உலகளாவிய பூகோள அரசியல் முன்னேற்றங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாலும், சந்தையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு முன்னர் பொருளாதார நிலைமைகள் மற்றும் நிறுவனங்களின் வருவாய் வாய்ப்புகள் குறித்த தெளிவான சமிக்ஞைகளுக்காகக் காத்திருப்பதாலும் சந்தை தொடர்ந்து அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது