2026 ஆம் ஆண்டில், இலங்கை வெளிநாடுகளுடன் பல பயனுள்ள ஒப்பந்தங்களைச் செய்துள்ளதுடன், தூதரக சேவைகளை வலுப்படுத்தியுள்ளதாகவும் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காகப் பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர இதனைத் தெரிவித்தார்.
தசாப்தங்கள் பழமையான வெளிநாட்டு சேவை நியமனச் சட்டத்தில் பல குறைபாடுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த ஆண்டு அச்சட்டம் திருத்தப்பட்டு புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சட்டமாக சமர்ப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், புலம்பெயர் தொழிலாளர்களின் நலனுக்காக 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டுக்கடன்கள் வழங்குவது உள்ளிட்ட பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தான் தனிப்பட்ட முறையில் தலையிடுவதாகவும் பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர வலியுறுத்தினார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால், அவர்கள் சமூக ஊடகங்கள் புகார்களைப் பதிவு செய்ய முடியும் என்றும், இதற்கென ஒரு சிறப்பு விசாரணைப் பிரிவு நிறுவப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். புகார்களைச் சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையில் எதிர்காலத்தில் ஒரு வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.