“அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கு முரணாகச் செயல்படும்” 35 ஐநா (UN) அல்லாத அமைப்புகள் மற்றும் 31 ஐநா சார்ந்த அமைப்புகளிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ளும் பிரகடனத்தில் டொனால்ட் ட்ரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த அமைப்புகளின் பெயர்ப்பட்டியலை வெள்ளை மாளிகை வெளியிடவில்லை. இருப்பினும், அந்த அமைப்புகள் “தீவிர காலநிலை கொள்கைகள் (radical climate policies), உலகளாவிய நிர்வாகம் மற்றும் அமெரிக்க இறையாண்மை மற்றும் பொருளாதார வலிமையுடன் முரண்படும் சித்தாந்த திட்டங்களை ஊக்குவிக்கின்றன” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா உறுப்பினராக உள்ள அல்லது ஒரு தரப்பாக இருக்கும் அனைத்து சர்வதேச அரசுகளுக்கிடையேயான அமைப்புகள், மாநாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்த முழுமையான மறுஆய்வின் முடிவே இந்த நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
“இந்த வெளியேற்ற நடவடிக்கைகளின் மூலம், அமெரிக்காவின் முன்னுரிமைகளை விட உலகளாவிய நிகழ்ச்சி நிரல்களை (globalist agendas) முன்னெடுக்கும் அமைப்புகளுக்கான அமெரிக்க வரி செலுத்துவோரின் நிதி மற்றும் ஈடுபாடு முடிவுக்கு வரும். மேலும், முக்கியப் பிரச்சினைகளைத் திறமையற்ற முறையில் அல்லது பயனற்ற முறையில் கையாளும் அமைப்புகளுக்குப் பதிலாக, அந்த வரிப்பணத்தை அமெரிக்காவின் நோக்கங்களுக்கு ஆதரவான பிற வழிகளில் சிறப்பாகப் பயன்படுத்த முடியும்,” என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட அமைப்புகளின் பட்டியல் மற்றும் மேலதிக விவரங்கள் கோரப்பட்டபோது, வெள்ளை மாளிகை உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
ஓராண்டுக்கு முன்பு தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடங்கியது முதல், ஐநா-விற்கான அமெரிக்க நிதியைக் குறைக்க ட்ரம்ப் முயன்று வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஐநா மனித உரிமைகள் பேரவையில் (UN Human Rights Council) இருந்து அமெரிக்காவின் ஈடுபாட்டை அவர் நிறுத்தினார்; பாலஸ்தீனிய நிவாரண முகமையான UNRWA-விற்கான நிதி நிறுத்தத்தை நீடித்தார் மற்றும் ஐநா கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவிலிருந்து (UNESCO) விலகினார். அத்துடன் உலக சுகாதார நிறுவனம் (WHO) மற்றும் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்தும் வெளியேறும் திட்டங்களை அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்
