அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் குடிவரவுத்துறை சுங்க அதிகாரி ஒருவர் 37 வயதுடைய பெண் ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளார். இது தற்காப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் கூற்றை உள்ளூர் அதிகாரிகள் நிராகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்
உயிரிழந்த பெண் ரெனி நிக்கோல் குட் (Renee Nicole Good) ஒரு “வன்முறை கலகக்காரர்” என்றும், அவர் குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்க (ICE) முகவர்கள் மீது வாகனத்தை ஏற்றி கொல்ல முயன்றார் என்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
ஆனால், மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே, “இது ஒரு அதிகாரி தனது அதிகாரத்தை கவனக்குறைவாகப் பயன்படுத்தியதால் ஏற்பட்ட மரணம்” என்று கூறினார். மேலும், ICE அதிகாரிகளை உடனடியாக நகரை விட்டு வெளியேறுமாறு அவர் கடுமையான சொற்களால் சாடினார்.
சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான வெள்ளை மாளிகையின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மினியாபோலிஸில் நூற்றுக்கணக்கான ICE முகவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் வெளியான வீடியோக்களின்படி, புதன்கிழமை காலை 10:25 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு மெரூன் நிற SUV வாகனம் மினியாபோலிஸின் குடியிருப்பு வீதி ஒன்றைத் தடுத்து நிறுத்தி வைத்திருப்பதை வீடியோக்கள் காட்டுகின்றன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நடைபாதையில் குழுமியிருந்தனர். குடியேற்ற அதிகாரிகள் அந்த வாகனத்தை நெருங்கி, ஓட்டுநர் இருக்கையில் இருந்த பெண்ணை வெளியே வருமாறு கூறினர். ஒரு அதிகாரி கதவைத் திறக்க முயன்றார். மற்றொரு அதிகாரி வாகனத்தின் முன்புறம் நின்றிருந்தார்.
அந்த மெரூன் நிற SUV வாகனம் அங்கிருந்து நகர முயன்றபோது, முன்புறம் நின்றிருந்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தினார். மூன்று முறை துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அதன் பின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு கார் மீது மோதியது.
ஜனாதிபதி ட்ரம்ப் தனது Truth Social தளத்தில், ஒரு ICE அதிகாரி கொடூரமாக வாகனத்தால் மோதப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். “அவர் உயிருடன் இருப்பதே ஆச்சரியம், தற்போது மருத்துவமனையில் குணமடைந்து வருகிறார்” என்று அவர் எழுதினார். மேலும், சட்ட அமலாக்க அதிகாரிகளை இலக்கு வைப்பதாக “தீவிர இடதுசாரிகள்” மீது அவர் குற்றம் சாட்டினார்.
மினியாபோலிஸ் போலீஸ் தலைமை அதிகாரி பிரையன் ஓ’ஹாரா கூறுகையில், அந்த பெண் தனது வாகனத்தில் வீதியை மறித்துக் கொண்டிருந்தார் என்றும், மத்திய அதிகாரி அவரை அணுகியபோது அவர் வாகனத்தை ஓட்டிச் செல்ல முயன்றார் என்றும் தெரிவித்தார்.
மினியாபோலிஸ் சிட்டி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுட்டுக் கொல்லப்பட்ட போது ரெனி நிக்கோல் குட் “தனது அண்டை வீட்டாருக்கு உதவியாக (பராமரிப்புப் பணியில்) இருந்தார்” என்று கூறப்பட்டுள்ளது.
சம்பவத்தை நேரில் பார்த்த எமிலி ஹெல்லர் என்பவர் CNN-இடம் கூறுகையில், “அதிகாரி ஒருவர் வாகனத்தின் windshield (முன் கண்ணாடி) வழியாக அந்தப் பெண்ணின் முகத்தில் சுட்டார்” என்று தெரிவித்தார்.
மிசோட்டா கவர்னர் டிம் வால்ஸ், மத்திய அரசாங்கம் பரப்பும் தகவல்களை “புரளி” (Propaganda) என்று கூறி நிராகரித்துள்ளார். “முழுமையான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும்” என்று அவர் கூறினார். கமலா ஹாரிஸ் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சித் தலைவர்களும் ட்ரம்ப் நிர்வாகத்தின் விளக்கத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் 2020-ல் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்ட இடத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலேயே நடந்துள்ளது. இதனால் மினியாபோலிஸில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பாதுகாப்பு கருதி மினியாபோலிஸ் பொதுப் பள்ளிகளுக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மினியாபோலிஸில் ICE முகவர்கள் ஏன்?
மாநிலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நலன்புரி மோசடிகளுக்கு (Welfare fraud) பதிலடியாக, கடந்த சில வாரங்களில் 2,000 மேலதிக மத்திய முகவர்களை ட்ரம்ப் நிர்வாகம் மினியாபோலிஸில் குவித்துள்ளது. குறிப்பாக, சோமாலிய சமூகத்தைச் சேர்ந்தவர்களை இலக்கு வைத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சோமாலிய சமூகத்தினரை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மத்திய நிதி உதவிகளையும் நிறுத்தி வைத்துள்ளார்.
