BBC
புத்தாண்டின் தொடக்கம் என்பது இயற்கையாகவே நமது கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திப்பதற்கான ஒரு காலம், அதில் பலருக்குத் தங்களது தொழில்முறை வாழ்க்கை (Career) குறித்த சிந்தனைகளும் அடங்கும்.
கிறிஸ்டினா ஓ’நீல் மற்றும் லாரா பிரவுன் ஆகிய இருவரும்இதழியல்துறையில் பணியாற்றியவர்கள். நிறுவன மறுசீரமைப்பு காரணமாக இருவரும் தங்களது வேலைகளை இழந்தனர். ஆரம்பத்தில் இது உலகமே முடிந்துவிட்டது போன்ற உணர்வைத் தங்களுக்குத் தந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

“நான் எனது முழு உழைப்பையும் அந்தப் பணியில் கொட்டினேன்… நாங்கள் முன்னிறுத்திய விழுமியங்களை நான் முழுமையாக நம்பினேன். ஆனால், என் விஷயம் என்று வரும்போது, அந்த விழுமியங்கள் அங்கு இல்லை,” என்கிறார் லாரா.
வேலையை இழந்த பிறகு, “fired” (வேலையிலிருந்து நீக்கப்பட்டேன்) என்ற நேரடி வார்த்தையையே பயன்படுத்த அவர்கள் முடிவு செய்தனர். நடந்ததை மறைக்காமல் வெளிப்படையாக இருப்பது, அந்தச் சூழலைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர உதவும் என்கிறார்கள் அவர்கள்.
“வேலை இழப்பைக் குறிக்க நாம் அனைவரும் பல மென்மையான மாற்று வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். ஆனால், எவ்வளவு சீக்கிரம் நீங்கள் உண்மையை ஏற்றுக்கொண்டு நேர்மையாக இருக்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் உங்களால் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும். நீங்கள் அடுத்து என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதற்கான விரைவான வழி இதுதான்,” என லாரா மேலும் கூறுகிறார்.
தற்போது, அவர்கள் இருவரும் தங்களது புதிய பணிகளில் சிறந்து விளங்குகின்றனர். லாரா தனது சொந்த ஊடக நிறுவனத்தை நடத்தி வருகிறார், கிறிஸ்டினா ‘சத்பி’ (Sotheby’s) இதழின் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறார்.
நீங்கள் வேலையை இழந்திருந்தாலோ அல்லது புதியதொரு மாற்றத்தைத் தேடிக்கொண்டிருந்தாலோ, உங்களுக்கு உதவ இதோ நான்கு வழிகள்:
1. கடந்த ஆண்டைப் பற்றி மீளாய்வு செய்யுங்கள்

புதிய வேலைத் தேடலில் குதிப்பதற்கு முன், கடந்த ஆண்டைப் பற்றிச் சிந்திப்பது அவசியம் என்று தொழில்முறை நிபுணர் சாரா எல்லிஸ் கூறுகிறார். நீங்கள் எதை அதிகம் செய்ய விரும்புகிறீர்கள், எது உங்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது அல்லது எது உங்கள் ஆற்றலை உறிஞ்சுகிறது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். “கடந்த ஒரு மாதத்தை மட்டும் பார்க்காதீர்கள், ஏனெனில் மிக அண்மையில் நடந்த விஷயங்கள் மட்டுமே நம் நினைவில் நின்று சரியான முடிவெடுக்கத் தடையாக இருக்கலாம்,” என்கிறார் அவர். மேலும், உங்கள் வேலை உங்கள் சமூக மற்றும் குடும்ப வாழ்க்கையில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதில் நேர்மையாக இருங்கள். உங்கள் வேலையே உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்க அனுமதிக்காதீர்கள்.
2. சிறிய படிகளை எடுத்து வையுங்கள்
பெரிய மாற்றத்தில் நேரடியாகக் குதிப்பதற்குப் பதிலாக, சிறிய படிகளை எடுத்து வையுங்கள். சாரா தனது கார்ப்பரேட் வேலையிலிருந்து சொந்தமாக நிறுவனம் தொடங்குவதற்கு ஏழு ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். “வாங்குவதற்கு முன் முயற்சி செய்” (Try before you buy) என்ற அணுகுமுறையை அவர் பரிந்துரைக்கிறார். இது ஒரு தன்னார்வத் தொண்டு அல்லது உங்களுக்கு விருப்பமான ஒரு சிறிய திட்டத்தில் (Project) ஈடுபடுவதாக இருக்கலாம். “மோசமான சூழலில் உங்களுக்கு அந்தத் துறை பிடிக்காமல் போகலாம். ஆனால், முழுமையாக வேலையை மாற்றிய பிறகு அதைத் தெரிந்துகொள்வதை விட, இப்பொழுதே தெரிந்துகொள்வது சிறந்தது,” என்கிறார் அவர்.
3. உங்கள் சாதனைகளை நினைவில் கொள்ளுங்கள்

வேலையை இழந்ததால், உங்களுக்குத் திறமை இல்லை என்று அர்த்தமல்ல. “நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் உங்கள் வேலையை இழந்ததால் மறைந்துவிடாது. உங்களது ஆற்றலை விட்டுக்கொடுக்காதீர்கள், உங்களது மதிப்பை நீங்களே நினைவில் வைத்திருப்பது முக்கியம்,” என்கிறார் லாரா. கிறிஸ்டினா கூறுகையில், வேலையிலிருந்து நீக்கப்பட்டால் ஏற்படும் அவமானம் என்பது பெரும்பாலும் “நமது கற்பனையில்தான்” இருக்கிறது என்கிறார். அமெரிக்கா போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை இழக்கிறார்கள், அது தனிநபர் சார்ந்ததல்ல, சூழல் சார்ந்தது. எனவே அந்த அவமான உணர்வைச் சுமந்து திரியாதீர்கள்.
4. ஒரு தொழில்முறை சரிபார்ப்புப் பட்டியலை (Career Checklist) உருவாக்குங்கள்
தற்போதைய வேலையில் மகிழ்ச்சி இல்லையென்றால், உடனடியாகத் தொடர்பில்லாத ஏதோ ஒரு வேலைக்கு விண்ணப்பிப்பது ஒரு பெரிய தவறு என்று சாரா கூறுகிறார். அதற்குப் பதிலாக “ஸ்கேனிங்” (Scanning) முறையைப் பின்பற்றுங்கள். லிங்க்ட்இன் (LinkedIn) போன்ற தளங்களில் உங்களுக்கு விருப்பமான 10 முதல் 15 வேலை விளக்கங்களைச் சேகரியுங்கள். அதில் மீண்டும் மீண்டும் வரும் சொற்களைக் கவனியுங்கள். அதுவே உங்களுக்கு எது முக்கியம் என்பதற்கான துப்புகளை வழங்கும். இதன் மூலம் தேவையற்ற விண்ணப்பங்களுக்குப் பதில், உங்களுக்குப் பொருத்தமான வேலையைத் தேர்ந்தெடுக்கலாம்.

