பொருளாதார நெருக்கடிக்கு பிந்தைய மேக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையை நிலையான வெளிநாட்டு முதலீடுகளாக மாற்றும் முயற்சியாக, இலங்கை இந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியது.
டுபாய் மற்றும் ரியாத் ஆகிய நகரங்களில் நடைபெற்ற ‘Invest Sri Lanka’ மாநாடுகளில், சிரேஷ்ட கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் சந்தை கட்டுப்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடனான சீர்திருத்தங்கள் நம்பிக்கையை மீட்டெடுத்து வருவதாகவும், சமீபத்திய சவால்களுக்கு மத்தியிலும் நாட்டின் மீட்சி உறுதியாக இருப்பதாகவும் அவர்கள் மத்திய கிழக்கு வங்கியாளர்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தனர்.
மத்திய வங்கி ஆளுநரின் கருத்து:
‘The National’ இதழ் செய்தி வெளியிட்டுள்ளபடி, டுபாயில் ஐக்கிய அரபு அமீரக வங்கியாளர்களுடனான சந்திப்பின் போது மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க கூறுகையில், 2022-ஆம் ஆண்டு கடன் செலுத்த முடியாமல் (Default) தவித்த நிலையை விட இலங்கை தற்போது வலுவான நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.
“இலங்கை வணிகத்திற்குத் தயாராக உள்ளது என்ற செய்தியை நாங்கள் தெரிவிக்க விரும்புகிறோம். முன்னதாக இலங்கை வங்கிகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்த வங்கிச் சமூகத்தை மீண்டும் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர் கூறினார்.
மேலும், “2026-ஆம் ஆண்டு என்பது மறுகட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்புக்கான ஆண்டாகும். கடந்த டிசம்பர் மாதம் ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மத்தியிலும் எமது பொருளாதார மீட்சி சீராக உள்ளது. இதில் ஐக்கிய அரபு அமீரக வங்கிகளும் பங்காளிகளாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
சவால்களும் வாய்ப்புகளும்:
3 பில்லியன் டொலர் IMF பிணை எடுப்புத் திட்டத்தின் கீழ் உள்ள இலங்கை, கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் மூலம் இருதரப்பு நிதி வழிகளை மீண்டும் திறந்து, நிறுத்தப்பட்ட வெளிநாட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்க எதிர்பார்க்கிறது.
டிசம்பர் மாதம் தாக்கிய ‘டிட்வா’ சூறாவளி காரணமாக 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், போக்குவரத்து மற்றும் பொதுக் கட்டமைப்புகள் பில்லியன் கணக்கான டொலர் சேதத்தைச் சந்தித்துள்ளன. இந்த மறுகட்டமைப்புப் பணிகளுக்கு பொது மற்றும் தனியார் மூலதனம் தேவைப்படுவதால், இது முதலீட்டாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
துணை அமைச்சரின் அழைப்பு:
தொழில் மற்றும் தொழில்முனைவோர் துறை பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க பேசுகையில், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், கனிம வளங்கள், விவசாயம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல துறைகளில் மத்திய கிழக்கு முதலீட்டாளர்களுக்கு “பெரிய வாய்ப்பு” இருப்பதாகக் கூறினார்.
“இலங்கையைப் பற்றிய உங்கள் முந்தைய கருத்துக்களை மாற்றிக்கொள்ள இதுவே சரியான நேரம். சில நாட்கள் இலங்கைக்கு வந்து அங்குள்ள சூழலை நேரில் அனுபவியுங்கள். மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்,” என்று அவர் அழைப்பு விடுத்தார். கடந்த காலங்களில் நிலவிய ஊழல் மற்றும் நிதி ஒழுக்கமின்மையே நெருக்கடிக்குக் காரணம் என்பதை ஒப்புக்கொண்ட அவர், தற்போதைய சீர்திருத்தங்கள் வெறும் மேலோட்டமானவை அல்ல, அவை கட்டமைப்பையே மாற்றியமைப்பவை என்றும் உறுதியளித்தார்.
ரியாத் சந்திப்பு:
இந்தக் குழுவினர் ரியாத்தில் சவுதி முதலீட்டாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களைச் சந்தித்தனர். இதில் ஆளுநர் வீரசிங்கவுடன், பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (SEC) தலைவர் பேராசிரியர் டி.பி.பி.எச். திஸாபண்டார, கொழும்பு பங்குச் சந்தை (CSE) தலைவர் ரே அபேவர்தன மற்றும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ராஜீவ பண்டாரநாயக்க ஆகியோர் கலந்துகொண்டு சந்தை சீர்திருத்தங்கள் மற்றும் ஒழுங்குமுறை பாதுகாப்பு குறித்து விளக்கமளித்தன