(Thilina Walpola) -| எகனாமிநெக்ஸ்ட் (EconomyNext)
கடந்த ஒரு மாத காலமாக இலங்கை ரூபாயின் (LKR) மதிப்பு அடைந்து வரும் கடுமையான வீழ்ச்சியானது, 2022 ஆம் ஆண்டின் பொருளாதாரச் சரிவின் போது ஏற்பட்ட கவலைகளையும் அச்சங்களையும் பொதுமக்களிடையே மீண்டும் தூண்டியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஓரளவு ஸ்திரத்தன்மையுடன் காணப்பட்ட ரூபாய் மதிப்பு, நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 5 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்து, மீண்டும் 2022 ஆம் ஆண்டில் காணப்பட்ட ஒரு மோசமான நிலையை எட்டியுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த நாணய வீழ்ச்சியானது உலகளாவிய போக்குகள், அமெரிக்க டாலரின் பலவீனம் மற்றும் சர்வதேச சந்தையில் பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட தற்காலிக ஏற்ற இறக்கம் என்று குறிப்பிட்டிருந்தாலும், இதனால் உள்நாட்டில் ஏற்படப்போகும் தாக்கங்கள் மிகவும் ஆழமானவை.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஆதரவுடனான பொருளாதார மீட்பின் ஆரம்பகட்ட இன்னும் பலவீனமான நிலையில் உள்ள ஒரு நாட்டிற்கு, நாணய வீழ்ச்சி என்பது வெறும் தொழில்நுட்ப ரீதியான சீரமைப்பு மட்டுமல்ல; அது வெளிநாட்டுச் செலாவணியில் வருமானம் ஈட்டாத ஒவ்வொரு சாதாரண குடிமகனின் வாழ்வாதாரத்திற்கும் விடுக்கப்படும் நேரடி அச்சுறுத்தலாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையின் கீழ் மீண்டு வரும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு, இந்த ரூபாய் மதிப்பிழப்பினால் ஏற்படக்கூடிய சில எதிர்மறையான விளைவுகள் இதோ:

1. பணவீக்கம் (Inflation)
எரிபொருள், மருந்து மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்கு இலங்கை இன்னும் பெருமளவில் பிற நாடுகளையே நம்பியிருக்கின்றது. ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையும் போது, இப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான செலவு (Landing cost) உடனடியாக உயர்கிறது.
இதன் நேரடி விளைவாக ‘செலவு-உந்து பணவீக்கம்’ (Cost-push inflation) ஏற்படுகிறது. குறிப்பாக, எரிபொருள் விலை அதிகரிக்கும் போது, அது போக்குவரத்து மற்றும் அனைத்துத் துறைகளின் உற்பத்திச் செலவுகளையும் உயர்த்தி, அடுத்தடுத்த விலை உயர்வு அலைகளை உருவாக்குகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், ரூபாய் மதிப்பு திடீரென தடையின்றி மிதக்கவிடப்பட்ட போது (Sudden float), நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் 70 சதவீதத்தை எட்டியது. தற்போது ஏற்பட்டுள்ள சரிவு அவ்வளவு கடுமையானதாக இல்லாவிட்டாலும், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எட்டப்பட்ட பணவீக்கக் குறைப்புப் போக்கை (Disinflationary trend) தலைகீழாக மாற்றும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த மார்ச் மாதத்தில் 2.2 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 5.4 சதவீதமாகக் கணிசமாக உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் அதன் பக்கவிளைவுகளே இதற்கு முதன்மைக் காரணமாகும். தற்போதைய ரூபாயின் புதிய வீழ்ச்சியானது இன்னும் சந்தை விலைகளில் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2. வாழ்க்கைச் செலவு (Cost of Living)
சாதாரண நடுத்தரக் குடும்பங்களைப் பொறுத்தவரை, நாணய மதிப்பிழப்பு என்பது அவர்கள் மீது விதிக்கப்படும் ஒரு ‘மறைமுக வரி’ (Hidden tax) போன்றதாகும். மின்சாரக் கட்டணம், எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் போது, கல்வி, சுகாதாரம் மற்றும் சேமிப்புக்காக ஒரு குடும்பத்திடம் எஞ்சியிருக்கும் வருமானத்தின் அளவு சுருங்குகிறது.
நிலையான சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினரே இத்தகைய திடீர் நாணய வீழ்ச்சியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பதை 2022 நெருக்கடி ஏற்கனவே நிரூபித்துள்ளது. ஏனெனில், வேகமாக உயரும் அடிப்படை நுகர்வுப் பொருட்களின் விலைகளுக்கு ஏற்ப அவர்களின் நிலையான வருமானம் அதிகரிப்பதில்லை.
2022 நெருக்கடிக்கும் தற்போதைய சூழலுக்குமுள்ள வேறுபாடு
2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சியானது சந்தையில் பொருட்களின் கடுமையான தட்டுப்பாடு மற்றும் நீண்ட வரிசைகளால் (Queues) அடையாளப்படுத்தப்பட்டது. அதற்கு மாறாக, தற்போதைய படிப்படியான ரூபாய் வீழ்ச்சியானது சந்தையில் பொருட்களைத் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தாலும், ஒரு ‘அமைதியான வரி’ போலச் செயல்பட்டு, சமீபத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் மக்கள் பெற்ற ஓரளவான நன்மைகளையும் மெதுவாக அழித்து விடுகிறது.
போக்குவரத்துச் செலவுகளும், மின்சாரக் கட்டணங்களும் ரூபாயின் பலவீனத்திற்கு ஏற்ப ஒரே நேரத்தில் உயரும் போது, உழைக்கும் குடும்பங்கள் மீண்டும் தங்களது அன்றாட நுகர்வுப் பொருட்களின் தரம் மற்றும் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு (Nutritional trade-off) தள்ளப்படுகிறார்கள்.
உலகளாவிய மோதல்களினால் ஏற்படும் அதிர்ச்சிகள் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் பலவீனங்களை மிக எளிதாக வெளிக்காட்டி விடுகின்றன. எனவே, நிதியியல் இலக்குகளை அடைவதை விடவும், நுகர்வுச் சந்தையின் ஸ்திரத்தன்மையைப் பேணிக் குடும்பங்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதே தற்போதைய மீட்பு நடவடிக்கைகளின் முக்கிய சவாலாக இருக்க வேண்டும் எனப் பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
