ஒருகாலத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் 6சதவீத ஒதுக்கீட்டை கல்விக்கு வழங்குமாறு கேட்டுப் போராடிய தற்போதைய பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவினால் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் அதன் அரைவாசியைக்கூட கல்விக்கு ஒதுக்கீடு செய்யமுடியவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இந்தநாட்டில் முன்பள்ளிகள் முறையற்ற கலைத்திட்ட நடைமுறையில் இயங்குதல் உள்ளிட்ட குறைபாடு, வடமாகாணத்தில் 300ஆரம்பகல்வி ஆசிரியர் பற்றாக்குறை, வடகிழக்கல் மாணவர்களுக்கு எண் எழுத்து திறனை அதிகரித்தல், வன்னியில் முழுமைப்படுத்தப்படாமலுள்ள வகுப்பறைக் கட்டடத் தொகுதிகள், வன்னியில் கணிணிச்சாதங்களும் இலந்திரனியல் சாதனங்களும் அதிகளவில் பழுதடைந்துள்ளமை மற்றும் அவற்றின் தேவைப்பாடு, பாடசாலைகளில் போதியளவான குடிநீர் வசதி மற்றும் மலசல கூட வசதிகளை ஏற்படுத்துதல், விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் உள்ளிட்ட குறைபாடுகள், கோரிக்கைகளையும் இதன்போது கல்வி அமைச்சின் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் முன்வைக்கப்பட்டது.
நாடாளுமன்றில் 25.11.2025இன்று பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின்மீதான குழுநிலை விவாதத்திலேயே இவ்விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரால் பேசப்பட்டுள்ளது.
கல்வியில் தரம், சமத்துவம் மற்றும் தனிச்சிறப்பை அடைதல் எனும் இலக்கில் 2026 இற்கான கல்வி நகர்கிறது.
உலகளாவிய நியமங்களுக்கு ஒத்திசைந்து இலங்கையின் பொதுக்கல்வி நிலைமாற்றத்துக்கான புதிய கல்வி மறுசீரமைப்பும் மாணவர்களுக்குரிய கூடுதல் திறன்வாய்ப்புகளை அளிக்க முயல்கிறது.
இலங்கையில் 2026 இலிருந்து தொடங்கவுள்ள கல்வி மறுசீரமைப்பு முயற்சிகளை நாம் வரவேற்கிறோம்.
மாணவர்களுக்கான காகிதாதிகள் கொடுப்பனவு, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான உதவு தொகை, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவு தொகை, கஸ்ட பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு, அதிபர்களுக்கான நிருவாகக் கொடுப்பனவில் அதிகரிப்பு
உள்ளிட்ட முயற்சிகளும் வரவேற்புக்குரியன.
சிறந்ததோர் எதிர்காலத்தை கட்டமைப்பதற்கு நிகழ்காலத்தின் மாணவர்கள் சிறந்த அறிவு, திறன், மனப்பாங்கு உடையவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களின் அடித்தளம் முன்பள்ளிக்கல்வியில் இருந்து தொடரவேண்டும்.
முறையாக மேற்பார்வை செய்யப்படாத அத்திவாரத்தோடு பலமாடிக் கட்டடங்களை கட்டுவதற்கு ஒப்பான ஒரு கலைத்திட்ட நடைமுறையே இங்குள்ளது. எந்தக்கட்டடம் எப்போது விழும் எனத் தெரியாதிருப்பதற்கு ஒப்பான ஒரு கலைத்திட்ட நடைமுறை இது.
தரம் – 01 தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் இலவசக் கல்வி நடைமுறை முன்பள்ளிகளில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
முன்பள்ளிகளின் தரத்தை உறுதிப்படுத்தல், முன்பள்ளிகளிடையே நிலவும் வளச் சமச்சீரற்ற நிலையை இழிவளவாக்கல் என்பவற்றுக்கான எட்டக்கூடிய தீர்வுகளை 2026 இற்கான வரவு செலவுத் திட்டம் காட்டவில்லை.
2027 இல் இருந்து முன்பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பொதுக் கலைத்திட்டத்தை முன்னிட்ட ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், முன்பள்ளிகளுக்கான வள ஒதுக்கீடுகள்
என்பவை தொடர்பிலும் தெளிவான நிலைப்பாட்டை அரசின் 2026 வரவு செலவுத் திட்டம் காட்டவில்லை.
பொதுக்கல்வி வலுவூட்டலிலும் தாங்கள் முன்வைக்கும் தரம், சமத்துவம் மற்றும் தனிச்சிறப்பை அடைதல் என்பவை வன்னியில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளுக்கு 2026இலும் சவாலாகுமா என்றே வினவுகிறோம்!
பொதுக்கல்வி நிலைமாற்றத்துக்கான புதிய கல்வி மறுசீரமைப்பில் ஒரு கணினியேனும் இல்லாத ஒரு பாடசாலைக்கு, ஒரு திறன் வகுப்பறையேனும் இல்லாத இடைநிலைப் பாடசாலைக்கு, இணையவசதி அற்ற ஒரு பாடசாலைக்கு, விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் மிகவும் நடைமுறைச்சாத்தியம் அற்றிருக்கிற இடைநிலைப் பாடசாலைக்கு 2026 இல் நீங்கள் சொல்லும் பதில் என்ன? வாய்ப்புப்பார்த்தலா!
வன்னியில் உள்ள பெரும்பாலான பாடசாலைகள் தீவின் கல்விச் சமத்துவத்தில், தீவின் கல்வித்தரத்தில், தீவிலே தனிச்சிறப்பை அடைவதற்கான வாய்ப்பை பெறுவதில் மிகுந்த சவால்களை எதிர்நோக்குகின்றன.
வடமாகாணத்தில் 300 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை ஆரம்பக்கல்வியில் மட்டும் காணப்படுகிறது.
அரசின் கலைத்திட்ட நடைமுறையில் முன்பள்ளிக்கல்வி மீதான முறையான மேற்பார்வை இல்லை.
இந்நிலையில் ஆரம்பக்கல்விக்கு பாடசாலைக்குள் நுழைகின்ற மாணவர்களுக்கு அங்கும் போதுமான ஆசிரியர் இல்லாதிருப்பதால் மாணவர்கள் பத்துவயதிற்குள் பெறவேண்டிய எண், எழுத்தறிவுத்திறன் மிகவும் கேள்விக்கு உள்ளாகிறது.
கொரோனா இடர்காலத்தில் கற்றல் தடங்கல் தொடர்பில் 3ஆம் வகுப்பு மாணவர்களின் எண், எழுத்து தொடர்பாக கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வடமாகாணத்தில் 16சதவீத மாணவர்களும் கிழக்கு மாகாணத்தில் 25சதவீத மாணவர்களும் மட்டுமே வயதுக்கேற்ற வாசிப்புத்திறனைக் கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
கடந்த தரம் – 5 புலமைப்பரிசில் பெறுபேற்றின் முடிவுகளின் அடிப்படையில் இரண்டு பகுதிகளிலும் 35 இலும் கூடிய புள்ளியை எடுத்த மாணவர்களின் சதவீதத்தில் தேசிய அளவிலான 70.43%இலும் குறைவான சதவீதத்தையே வடகிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களும் பெற்றுள்ளன. மேற்படி அடைவுநிலை, ஒப்பீட்டளவில் வடகிழக்கு பகுதிகளில் ஆரம்பக்கல்வியில் மாணவர்களின் எண், எழுத்து திறனை மேம்படுத்தவேண்டிய தேவையை
சுட்டிக்காட்டுக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டத்தொடங்கி கிடப்பில் போடப்பட்டு முழுமை அடையாத வகுப்பறைக் கட்டடங்களை கட்டி முழுமைப்படுத்துவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் உங்கள் அரசுக்கு தேவை!
வவுனியா தெற்கில் 10 பாடசாலைகள், மன்னாரில் 5 பாடசாலைகள், வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு கல்வி வலயங்களில் தலா 2 பாடசாலைகளில்
முழுமைப்படுத்தபடாத கட்டடங்கள் வகுப்பறைத் தேவைகளோடு காணப்படுகின்றன.
மன்னார் கல்வி வலயத்தில் மட்டும் இணைய வசதி அற்று 45 பாடசாலைகள், ஒரு மேசைக்கணினி கூட இல்லாது 26 பாடசாலைகள், 72 பழுதடைந்த மடிக்கணினிகள், 126 பழுதடைந்த வரைபட்டிகைகள், 22 பழுதடைந்த திறன் தளங்கள், 539 பழுதடைந்த மேசைக்கணினிகள்,13 பழுதடைந்த திறன் தொலைக்காட்சிகள் என
மொத்தம் 772 கணினிச்சாதனங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் மட்டும் மேற்படி வகையில் 522 மேசைக்கணினிகள் அடங்கலாக மொத்தம் 870 இலத்திரனியல் சாதனங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.
வவுனியா தெற்கு வலயத்தில் மேற்படி வகையில் 318 மேசைக்கணினிகள் அடங்கலாக மொத்தம் 488 இலத்திரனியல் சாதனங்கள் பழுதடைந்து காணப்படுகின்றன.
இவ்வாறு ஏனைய மூன்று கல்வி வலயங்களிலும் காலங்கடந்த, பமுதடைந்த, பதிவழிக்கப்படவேண்டிய கணினிகள் ஏராளமாக காணப்படுவதோடு கலைத்திட்ட நடைமுறைக்கான இலத்திரனியல் சாதனத்தேவையும் மிகுதியாக உள்ளது.
ஆரம்பப்பாடசாலைகளில் நிருவாகத் தேவைகளை ஆற்றுவதற்கேனும் ஒரு கணினியையேனும்
ஒவ்வொரு பாடசாலையும் கொண்டிருப்பதை
தங்கள் 2026 வரவுசெலவுத்திட்டம் உறுதிப்படுத்தாதா!
பொதுக்கல்வி நவீனமயப்படுத்தல் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்கள் ஊடாக தெரிந்தெடுக்கப்பட்ட சில பாடசாலைகளுக்கு மட்டும் ஒவ்வொரு கணினி வீதம் வழங்கி
எப்போது பாடசாலைகளில் கல்வி நிலைமாற்றத்தை ஏற்படுத்தப்போகிறீர்கள்!
100 மாணவர்களுக்கு ஒரு மலசலகூடம் என்ற விதிமுறையில் பாடசாலைகளுக்குரிய மலசலகூடங்களை மட்டுப்படுத்துகின்றீர்கள். 100, 200 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு எவ்வாறு இது பொருந்தும் என எண்ணிப்பாருங்கள்!
15 நிமிட இடைவேளையில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனை மாணவர்கள் சிறுநீர் கழிக்கமுடியும்? அதன் பின்னரும் கை கால் கழுவி எத்தனை பேரால் அந்த 15 நிமிட இடைவேளையில் சாப்பிடவும் முடியும்?
போதியளவு நீர் குடிக்காது, சிறுநீரைக் கட்டுப்படுத்தி பிள்ளைக்கு உடல் உபாதைகளைத் தான் இந்த முறைமை தோற்றுவிக்கிறது.
பாடசாலைகளில் போதியளவு மலசலகூடங்களின் நிருமாணத்திற்கும்
அதே போல மலசல கூடங்களின் திருத்தங்கள் மற்றும் பராமரிப்பிற்கும் போதுமான நிதி ஒதுக்கீடு கடந்த காலங்களில் கிடைக்கப்பெறவில்லை. 2025 இலும் கிடைக்கப்பெறவில்லை.
60 பாடசாலைகளில் திருத்தத்தேவை உள்ள கல்வி வலயம் ஒன்றுக்கு 20 பாடசாலைக்கே திருத்த நிதி ஒதுக்கப்படுகிறது.
திருத்தம் மற்றும் பராமரிப்புக்கான மட்டுப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகளால் மலசலகூடங்கள் உள்ளிட்ட பல பௌதிக வளங்கள் பாவனைக்கு உதவாத நிலைக்கு பாடசாலைக்குள் மாறுகின்றன.
மட்டுப்படுத்தப்பட்ட பௌதிக வளம், மட்டுப்படுத்தப்பட்ட மனித வளம், 2026 இல் நடைமுறைக்கு வரவுள்ள கல்வி மறுசீரமைப்புக்கு மட்டுமல்ல தற்போதுள்ள கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவே போதியளவு தொழினுட்ப வசதிகள் இன்றி, விஞ்ஞான ஆய்வுகூட வசதிகள் இன்றி மற்றொரு ஆண்டு – 2026 இலும்
நீங்கள் இலக்கு வைத்துள்ள
கல்வியில் தரம், கல்வியில் சமத்துவம், கல்வியில் தனிச்சிறப்பை அடைதல் என்பன வன்னிக்கு எட்டாக்கனியாகவே அமையவுள்ளதா!
ஒருகாலத்தில் கல்விக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 6% கல்விக்கு என போராடிய ஒருவரே இன்று கல்வி அமைச்சராகும் போது அதன் பாதியைக்கூட கல்விக்காக ஒதுக்க இயலவில்லை. “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்” – என்றார்.
